தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை, டெல்லி பயணம் - பின்னணி என்ன? முழு விவரம்!

கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சில காலம் விவசாய பணிகளில் ஆர்வம் காட்டி வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு அவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

அவரது வேகமான செயல்பாடுகளால் பா.ஜ.க.வின் தமிழக தலைவராக உயர்ந்தார். அதிரடியான பேச்சுக்களால் இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததுடன், நடைபயணம் மூலம் கட்சியையும் வளர்த்தார். இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மாநில பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார்.

இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், 27 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து. தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டன.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டது ஒரு காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அண்ணாமலை மாநிலத்தலைவராக இருந்தபோது, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 11 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில் தற்போது அது 2 சதவீதமாக குறைந்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பின்னர் அண்ணாமலைக்கு, கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. அதற்கேற்ப தேர்தல் பிரசாரத்திலும் அண்ணாமலை பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 9-ம் வகுப்பிலிருந்து மும்மொழிக் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்தும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக அண்ணாமலை சமீபத்தில் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார். இது பா.ஜ.க. தலைமையை அதிர வைத்தது. மத்திய அரசின் எந்தத் திட்டத்துக்கும் முதல் ஆளாக ஆதரவுக் குரல் கொடுத்து வந்த அண்ணாமலை, முதன்முறையாக எதிர்ப்புக்குரலை ஓங்கி ஒலித்தார்.

இது பா.ஜ.க.வுக்குள் பலத்த சலசலப்பை உண்டாக்கியது. இதைத்தொடர்ந்து, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது. புதிய கட்சி குறித்த அறிவிப்பை அண்ணாமலை தனது பிறந்தநாளான வருகிற 4-ந்தேதி அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான தகவல்கள் சட்டசபை தேர்தலுக்கு முன்பே பரவி வந்தன. அதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் கட்சிப் பெயர்கள், கொடி வடிவமைப்பு குறித்து ஆலோசனை வழங்கி வந்தனர்.

இதனிடையே பா.ஜ.கவில் இருந்து அண்ணாமலை விலகி தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான தகவலையடுத்து, அவரை பா.ஜ.க.விலேயே தொடருமாறு தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தொலைபேசியிலும், நேரிலும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாஜகவில் இருந்து விலக உள்ளதாக கூறப்படும் நிலையில், பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை அண்ணாமலை இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது கட்சி தலைமையிடம் பாஜகவில் இருந்து விலகுவதற்கான விலகல் கடிதத்தை அண்ணாமலை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் மந்திரி பதவி வழங்க பாஜக முன்வந்ததாகவும், அந்த வாய்ப்பை அண்ணாமலை நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை முதலில் இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாகவும், பின்னர் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதியாக உள்ளதாவும் கூறப்படுகிறது.

தனிக்கட்சி தொடங்குவது என்ற முடிவை எடுத்த பின்னரே அண்ணாமலை டெல்லி சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி செல்வதற்குமுன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 2 நாட்களில் அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel