இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: த.வெ.க. நிர்வாகிகள் 2 பேர் கைது

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 29). இவர் தமிழக வெற்றிக் கழகம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பில் உள்ளார். இவருடைய நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால்(27), இவரும் த.வெ.க. நிர்வாகியாக உள்ளார்.


இவர்கள் 2 பேரும் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அந்த இளம்பெண்ணை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.


த.வெ.க. நிர்வாகிகள் கைது: அப்போது அந்த இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, 2 பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த பின்னர் தனக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்து அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி வந்த அவர், இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இளம்பெண்ணின் புகாரின் பேரில், பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த த.வெ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel