புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? தக்கவைக்க டெல்லி பாஜக தீவிரம்!

புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? தக்கவைக்க டெல்லி பாஜக தீவிரம்!

சென்னை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரை கட்சியில் தக்கவைத்துக் கொள்ள பாஜக டெல்லி மேலிடம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.


அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, 2024 மக்களவைத் தேர்தலில் தனி அணியாக போட்டியிட்ட பாஜக 11 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், அவர் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்ட பின்னர், அதிமுகவுடன் வலுவான கூட்டணி அமைத்தும் பாஜகவால் வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்ததாக கூறப்படுகிறது.


அண்ணாமலையின் அதிரடியான பேச்சும், தீவிரமான அரசியல் செயல்பாடுகளும் ஏராளமான இளைஞர்களை பாஜக பக்கம் ஈர்த்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதேவேளை, விஜய் தலைமையிலான தவெக முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சூழலில், பாஜகவில் தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற எண்ணத்தில் அண்ணாமலை இருப்பதாகவும், சுதந்திரமான அரசியல் பயணத்தை முன்னெடுக்க தனிக்கட்சி தொடங்குவதே சிறந்த வழி என அவர் கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலையை கட்சியில் தொடரச் செய்வதற்காக மீண்டும் மாநிலத் தலைவர் பதவி வழங்குவது அல்லது மத்திய இணையமைச்சர் பொறுப்பு வழங்குவது உள்ளிட்ட வாய்ப்புகள் குறித்து டெல்லி மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


எனினும், தமிழக அரசியலில் தனித்துவமான எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாகவும், ஓரிரு வாரங்களுக்குள் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆனால், இந்த தகவல்கள் குறித்து அண்ணாமலை அல்லது பாஜக தலைமையிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel