தாஜ்மஹால் சிவன் கோயிலா? - மத்திய அரசு, தொல்லியல் துறை பதிலளிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு!
தாஜ்மஹால் முன்னர் ‘தேஜோ மஹாலயா’ எனப்படும் ஒரு சிவன் கோயிலாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கின், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கம் கோரி மத்திய அரசு மற்றும் தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் என்பவர், தாஜ்மஹால் முன்னர் ‘அக்ரேஷ்வர் மகாதேவ் நாகநாதேஸ்வர் விராஜ்மான் தேஜோ மஹாலயா’ என்ற சிவன் கோயிலாக இருந்ததாகவும், இதனால் தாஜ்மஹாலில் இந்துக்கள் வழிபாடு செய்ய உரிமை உண்டு என்று அறிவிக்கக்கோரி, ஆக்ரா மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, தாங்கள் கூறியது தொடர்பான ஆதராங்களைப் பெற தாஜ்மஹாலை ஆய்வு செய்து புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர்.
மனுதாரர்கள் போதுமான வருவாய் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும், அவர்கள் தாக்கல் செய்த நில ஆவணங்களும், தாஜ்மஹாலின் அதிகாரப்பூர்வ ஆவணங்களும் ஒத்துப்போகவில்லை எனக்கூறி, ஆக்ரா நீதிமன்றம் அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆக்ரா கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவும் தாக்கல் செய்தனர். பின்னர் கூடுதல் மாவட்ட நீதிபதியால் அந்த மனுவும் விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அதில், ஆக்ரா நீதிமன்றங்களின் உத்தரவை ரத்து செய்யுமாறும், ஆணையரை நியமிப்பதற்கான விண்ணப்பத்தை அதன் தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்குமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிடவும் கோரியுள்ளனர்.
மேலும் மனுதாரர்களின் முன்னிலையில் தொல்பொருள் ஆய்வுத்துறை தாஜ்மஹாலை உள்ளேயும், வெளியேயும் புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தொல்லியல் துறைக்கும், மத்திய அரசுக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னரே இந்திய தொல்லியல் துறை பல வழக்குகளிலும், ‘தாஜ்மஹால் வளாகத்தில் எந்தவொரு சிவன் கோயிலோ அல்லது சிவலிங்கமோ இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை. அது முற்றிலும் ஷாஜஹானால் கட்டப்பட்ட இஸ்லாமியக் கல்லறை மாளிகை மட்டுமே’ என்று திட்டவட்டமாகத் தெளிவுப்படுத்தியுள்ளது.
பி. என். ஓக் (P.N. Oak) என்ற எழுத்தாளர் எழுதிய புத்தகங்களில், தாஜ்மஹால் என்பது உண்மையில் 'தேஜோ மஹாலயா' என்ற சிவன் கோயில் என்றும், அதை ஷாஜகான் கைப்பற்றி கல்லறையாக மாற்றினார் என்றும் ஒரு மாற்று வாதத்தை முன்வைத்தார். இது உண்மையில்லை எனப் பல வரலாற்றாசிரியர்கள் கூறினாலும், அந்தக் காலத்தில் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
‘தாஜ்மஹால் ஒரு கோயில் மாளிகை’ (The Taj Mahal is A Temple Place) என்ற பெயரில் அவர் எழுதியிருந்த அந்தப் புத்தகத்தில், மும்தாஜ் மஹாலின் மரணத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தாஜ்மஹால் இருந்ததற்கான ஆதாரங்களை கூறுவதாக இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.