காலிஸ்தான் விவகாரத்தில் குற்றச்செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம்: நியூசிலாந்து பிரதமர்

காலிஸ்தான் விவகாரம் இந்தியா, நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு தடையாக இருக்காது என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக நேற்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டு அதிபர் பிரபாவோ சுபியாண்டோ, இந்தோனேசியாவின் உயரிய விருதான ‘பிந்தான் அடிபுர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா’ பதக்கத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவித்து கவுரவித்தார்.

இந்நிலையில், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

காலிஸ்தான் விவகாரம் இந்தியாவில் பெரும் கவலையை எற்படுத்தி உள்ளது என்பதை அறிவோம். அதே வேளையில் இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு தடையாக இருக்காது.

நாங்கள் ஒரு தாராளவாத ஜனநாயக நாடாக இருந்து, கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமையை மதித்தாலும் மக்கள் எங்கள் விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

எந்த ஒரு மிரட்டல் அல்லது வன்முறை அச்சுறுத்தலும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எங்கள் காவல்துறை இதுபோன்ற விவகாரங்களில் விழிப்புடன் இருந்து அவற்றைச் சரியாகக் கையாளுகிறது. குற்றச்செயல்களை எங்கள் அரசு பொறுத்துக் கொள்ளாது.

காலிஸ்தான் தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவது என்பது அபாயம் அல்லது அச்சுறுத்தல் குறித்து எங்கள் காவல்துறை என்ன மதிப்பீடு செய்கிறது என்பதைப் பொறுத்தே அது அமையும்.

நியூசிலாந்தில் உரிமைகளும் பொறுப்புகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளன. பொறுப்பை ஏற்காமல் உரிமையை மட்டும் கோர முடியாது. மக்கள் அதற்கேற்ப நடந்து கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

2024-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்கள் சட்ட வரம்பிற்கு உட்பட்டே இருந்தன. அவை காவல்துறையினரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப் பட்டன என தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 10-ம் தேதி முதல் 2 நாட்கள் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel