கரூர் விவகாரம்: ஆதவ் அர்ஜுனாமீது தனி வழக்குப் பதிவு செய்யக்கோரி சிபிஐயிடம் திமுக மனு!
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஐ இயக்குநரிடமும், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மேற்பார்வைக் குழுவிடமும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் மனு அளித்துள்ளார்.
மேற்பார்வைக்குழுவிடம் அவர் அளித்த புகார் மனுவில்,
’ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும்,
முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் கரூர் பயணம் மற்றும் அதையொட்டி வழங்கப்படும் பண உதவிகள், கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் அல்லது பிற அரசு சலுகைகள் ஆகியவை, சிபிஐ உடனான கருத்துகளைப் பெற்ற பிறகு, இக்கண்காணிப்புக் குழு அவசியமெனக் கருதினால் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
சிபிஐ இடம் அளித்தப் புகாரில்,
இந்த விவகாரம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா மீது தனிவழக்குப் பதிவு செய்ய வேண்டும்; அதனைத்தொடர்ந்து சாட்சியங்களை கலைக்க முயன்றது, முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக தவறான தகவல்களை கட்டமைப்பது தொடர்பான ஆதவ் அர்ஜுனாவின் நடைமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
விஜய்யின் கரூர் பயணத்தில் கவனம் வைக்கவேண்டும், இந்த பயணத்திற்கு முன்பே முக்கிய சாட்சிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து அவற்றை பாதுகாக்க வேண்டும். ” எனக் கோரியுள்ளார்.