9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க 'அமோக' வெற்றி பெற்றுள்ளது. வாக்குச்சீட்டு முறை என்பதால் வாக்கு எண்ணிக்கையும் விடிய விடிய நடைபெற்றது.
ஆங்காங்கே சிறு சிறு பிரச்னைகளும், சுவாரஸ்ய சம்பவங்களும் நிகழ்ந்தன. வேலூர் மாவட்டத்திலும் பெருவாரியான இடங்களை தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. குடியாத்தம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அங்குள்ள கே.எம்.ஜி கல்லூரியில் 152 மேஜைகளில் 630 அலுவலர்களால் எண்ணப்பட்டன. இந்த ஒன்றியத்திலிருக்கும் மோர்தானா ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பரந்தாமன், சீதாராமன், பங்காரு என்ற மூன்றுபேர் போட்டியிட்டனர்.வாக்கு எண்ணிக்கைவாக்கு எண்ணிக்கை முடிவின்போது, பரந்தாமன் 464 வாக்குகளும், சீதாராமன் 462 வாக்குகளும், பங்காரு 324 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
சீதாராமனைவிட பரந்தாமன் இரண்டு வாக்குகள் முன்னிலையில் இருந்தபோது, தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், சீதாராமனுக்கு தபால் ஓட்டு மூலம் கூடுதலாக ஒரு வாக்கு கிடைத்து. இதன்மூலம் அவரது வாக்கு எண்ணிக்கை 463-ஆக உயர்ந்தது. முதலிடத்திலிருந்த பரந்தாமனுக்கு தபால் ஓட்டும் கிடைக்கவில்லை. ஆனாலும், அவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். ஒரே வாக்கு வித்தியாசத்தில் ஊராட்சி மன்றத் தலைவரான பரந்தாமனுக்குத் தேர்தல் அலுவலர்கள் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழையும் வழங்கினர்.