வாணியம்பாடி அருகே, ஆன்லைன் சூதாட்டத்தில், 10 லட்சம் ரூபாய் இழந்த ஐ.டி., என்ஜினியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே புருேஷாத்தமகுப்பம் காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம், 65. விவசாயி.இவரது மகன் ஆனந்தன், 30. இவர் சென்னை ஐ.டி., நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு நேற்று 9 ம் தேதி ஆனந்தன் வந்தார். காலை 9:00 மணிக்கு ஓட்டு போட்டார். அன்று மாலை பெற்றோர் வெளியே சென்று விட்டு இரவு 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்து கதவை தட்டினர்.திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்ததில், ஆனந்தன் ஒரு அறையில் மின் விசிறியில் துாக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.
வாணியம்பாடி போலீசார் ஆனந்தன் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.அதில், ஆன்லைன் மூலம் மொபைல் போனில் ரம்மி சூதாட்டத்தை ஆனந்தன் விளையாடி வந்துள்ளார். இதில் அவர் 10 லட்சம் ரூபாய் இழந்து விட்டார். சாமி படத்தின் முன்பு சத்தியம்இது குறித்து பெற்றோரிடம் கூறிய போது அவர்கள் அவரை கண்டித்தனர்.
இனிமேல் சம்பாதிக்கும் பணத்தை தங்களிடம் கொடுத்து விட வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடக் கூடாது என சாமி படத்தின் முன்பு சத்தியம் செய்து கொடுக்க செய்தனர்.பின் உறவினரை பார்க்க பெற்றோர் வெளியே சென்றனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட முடியாமல் மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது