காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்!- அன்புமணி
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்து விட்டது. கர்நாடக அணைகளில் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு கூறியதை அப்படியே மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். இந்த பொம்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காது.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து முடிவெடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கி, நேற்று வரை தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 28.30 டி.எம்.சி நீரில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய தமிழக அதிகாரிகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், தங்களிடம் பெங்களூரு மாநகர குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் தண்ணீர் திறப்பதில் இப்போதுள்ள நிலையே தொடரும் எனக் கூறி விட்டது. அதனால் தமிழகத்திறகு தண்ணீர் கிடைக்காது.
கர்நாடக அணைகளின் நீர் இருப்பு தொடர்பாக அம்மாநில அரசு தெரிவித்த தகவல்கள் அப்பட்டமான பொய் ஆகும். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹேமாவதி அணையில் 22.77 டி.எம்.சி, கே.ஆர்.எஸ் அணையில் 17.21 டி.எம்.சி, கபினி அணையில் 13.02 டி.எம்.சி, ஹாரங்கி அணையில் 7.20 டி.எம்.சி என 60.21 டி.எம்.சி நீர் இன்று மதியம் 12.00 மணி நிலவரப்படி உள்ளது. ஹாரங்கி அணையில் 85% அளவுக்கும், கபினியில் 67% அளவுக்கும், ஹேமாவதி அணையில் 61 டி.எம்.சி அளவுக்கு நீர் உள்ளது. அணைகளின் குறைந்தபட்ச நீர் இருப்பான 23 டிஎம்சி போக மீதமுள்ள 37 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியும்.
பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி நீரை வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 32 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியும். இந்த உண்மைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு ஆணையிட காவிரி மேலாண்மை ஆணையம் கடுமையாக உத்தரவிடாததற்கு காரணம் அம்மாநிலத்திற்கு ஆதரவான நிலைப்பாடும், அப்படியே ஆணையிட்டாலும் அதை செயல்படுத்த வைக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லாததும் தான்.
ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 26 டி.எம்.சி நீரை பாக்கி வைத்துள்ளது. இதற்காக கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அதிகாரமும் மேலாண்மை ஆணையத்திற்கு கிடையாது. அதிகபட்சமாக கர்நாடகம் தண்ணீர் திறக்காதது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து, மத்திய நீர்வளத்துறை வாயிலாக கர்நாடக அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும். இப்படிப்பட்ட பொம்மை ஆணையத்தை வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு காவிரி நீரில் உரிய பங்கை வாங்கி விட முடியும் என நினைப்பது அறியாமையாகத் தான் இருக்கும். இந்த ஆணையத்தால் தமிழகத்திற்கு பயனில்லை.
காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது குறித்த தங்களின் தீர்ப்பை கர்நாடகம் செயல்படுத்தாது என்ற உண்மை நடுவர் மன்ற நீதிபதிகளுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால் தான், 2007&ஆம் ஆண்யில் வழங்கிய இறுதித் தீர்ப்பில் ‘‘கடந்த கால பதிவுகளில் இருந்து பார்க்கும் போது காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வில்லை என பெரும்பாலான ஆண்டுகளில் தமிழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. அப்போதெல்லாம் போதிய அளவு மழை பெய்யாததால் தண்ணீர் திறக்க முடியவில்லை என கர்நாடகம் கூறியுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, எத்தகைய மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டாலும் அதற்கு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்’’ என்று நடுவர் மன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுஅதுமட்டுமின்றி, கர்நாடகத்தின் தலையீடின்றி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான தீர்வையும் நடுவர்மன்றம் வழங்கியுள்ளது.‘‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’’, ‘‘காவிரியின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளின் இயக்கத்தையும் மேற்பார்வையிடும் அதிகாரம், அணைகளின் நீர் திறப்பை ஒழுங்குமுறை குழுவின் உதவியுடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியவை காவிரி மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும்’’ என்று நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் ஐந்தாவது தொகுப்பில், எட்டாவது அத்தியாயத்தில் முறையே 14, 16 ஆகிய பத்திகளில் கூறப்பட்டிருக்கிறது. நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதில் மத்திய அரசுத் தரப்பில் தயக்கம் காட்டப்பட்டதால் தான் அணைகளை கையாளும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக எந்த அதிகாரமும் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து 2018&ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தான் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.
எந்த அதிகாரமும் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையம் நடைமுறையில் இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கு காவிரியில் உரிய நீர் கிடைக்காது. மழைக்காலங்களில் நிரம்பி வழியும் வெள்ள நீர் மட்டும் தான் கிடைக்கும். காவிரியில் தமிழ்நாட்டிற்கான உரிமைகளைப் பெற வேண்டுமானால், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் குறுக்கே கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரம் கொண்டபக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் ஒரே தீர்வு ஆகும். இத்தகைய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்துவது மட்டுமின்றி, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.