பெல்லட் துப்பாக்கிகள்.. சீருடையற்ற நபர்கள்.. காலாவதியான கண்ணீர் புகைகுண்டுகள் - இளைஞர்கள் மீதான தாக்குதலில் தொடர் சர்ச்சை

டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி கட்சியின் முன்னெடுப்பில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியில் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர்.

கண்ணீர் புகைகுண்டுகளை வீசி இளைஞர்களை கலைக்க முயன்றனர். இதன்போது 60 போராட்டக்காரர்கள் காயமுற்றனர். 116 போலீசாரும் காயமுற்றனர். 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

காயமுற்ற இளைஞர்களில் ஒரு இளம்பெண் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 20 தாக்குதல் குறித்த பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி அமைதியான முறையில் பேரணி நடத்திய இளைஞர்கள் மீதான அரசின் அடக்குமுறை குறித்த விமர்சனங்களை எழுப்பியது.

பலர் களத்தில், தாங்களும் உங்கள் மகன் - மகள்களின் வயதுடையவர்கள்தான், எங்களை எப்படி உங்களால் மனசாட்சியின்றி தாக்க முடிகிறது என போலீசாரையும் மத்திய படையினரையும் பார்த்து இளைஞர்கள் கேள்வி எழுப்பிய வீடியோக்களும் வைரலாகின.

சீருடையில் இல்லாதவர்களும் கையில் தடிகளுடன் இளைஞர்களை தாக்கியது சர்ச்சையாகி வருகிறது. அவர்கள் மத்திய பாஜக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ்-ஆல் ஏவிவிடப்பட்ட குண்டர்களா என எதிர்க்கட்சி தரப்பினர் பலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

சீருடை இன்றி வந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த நபர்களே மாணவிகள் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கொடூரமாகத் தாக்கியதாக சிஜேபி தலைவர் அபிஜீத் திப்கேவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜூலை 20 போராட்டத்தின்போது இளைஞர்களை Pellet guns எனப்படும் துப்பாக்கிகளை கொண்டு போலீசார் மற்றும் ஆர்ஏஎப் உள்ளிட்ட மத்திய படையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடக்கத்தில் டெல்லி காவல்துறை இக்குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்திருந்த போதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த போராட்டக்காரர்களை உடலிலிருந்து பெல்லட் குண்டுகள் அகற்றப்பட்டதாக மருத்துவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் படுகாயமடைந்த ஷேக் இர்ஷாத் மன்சூரி என்ற போராட்டக்காரரின் உடலில் இருந்து பெல்லட் குண்டுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதை அமைச்சர் ஜே.பி. நட்டா நேரில் பார்த்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் கன் எனப்படும் விசைத் துப்பாக்கி மூலம் ஒருமுறை சுட்டால் நூற்றுக்கணக்கான Lead pellets குண்டுகள் உடலில் பாயும்.

இதனால் சுடப்பட்ட நபர் உடலில் புள்ளி புள்ளிகளாக காயங்கள் ஏற்படும். இதுபோன்று அன்றைய பேரணியில் காயமுற்றவர்கள் புகைப்படங்கள் பலவும் வெளியாகியுள்ளன.

பெல்லட் குண்டுகளால் பார்வை மற்றும் கேட்கும் திறனை பறிபோகும் அபாயமும் உண்டு.

போராட்டக்காரர்களை கலைக்க, கடந்த டிசம்பர் மாதமே காலாவதியான நச்சுத் தன்மை கொண்ட கண்ணீர்ப்புகை குண்டுகளைக் காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகளின் உடைந்த பாகங்களைச் ஆதாரமாக காட்டிய சிஜேபி அமைப்பினர், மாணவர்களுக்கு கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தவே இத்தகைய குண்டுகள் திட்டமிட்டு வீசப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆணிகள் பொருத்தப்பட்ட லத்திகளைப் பயன்படுத்தியதை போலீஸ் மறுத்த நிலையில், விஷால் தோமர் என்ற காவலர் ஆணி பொறிக்கப்பட்ட லத்தியுடன் நிற்பதை மாணவர்களே மடக்கிப் பிடித்துக் கேள்வி கேட்கும் வீடியோவை சிஜேபி வெளியிட்டது.

மற்றும் Shock batons எனப்படும் உடலில் மின்சார அதிர்வை ஏற்படுத்தும் லத்திகளும் அன்றை தினம் இளைஞர்கள் மீது பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஜூலை 20 சம்பவத்தில் இளம் பெண் போராட்டக்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

போராட்டம் நடந்த இடத்திலிருந்து வெளியேற முயன்ற ஒரு பெண்ணின் பின்புறத்தில் காவலர் ஒருவர் லத்தியால் குத்தும் வீடியோ வைரலானது.

"பெண்களின் உணர்வுப்பூர்வமான உடற்பகுதிகளில் தாக்குதல் நடத்த இவர்களுக்கு எப்படித் தைரியம் வந்தது?" என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கேள்வி எழுப்பியிருந்தார்.

போராட்டத்தில்12 வயது சிறுமி ஒருவரும் போலீஸ் தாக்குதலில் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி போராட்டத்தில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுப்பட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது போல சித்தரிக்கும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின.

இவை நாட்டின் பிற பகுதிகளில் முன்பு நடந்த வன்முறைகளின் பழைய வீடியோக்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

வெகு மக்களின் கோபத்தை போராட்டக்காரர்கள் மீது திருப்ப, பாஜக செய்யும் தந்திரம் இதுவென, ஜந்தர் மந்தர் போராட்டக்காரர்களும் எதிர்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மற்றொரு வீடியோவில், காவல்துறையினரே தங்களது சொந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவற்றின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படவில்லை.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel