இன்று தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! - கனிமொழி

தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜன் என்பவரின் மகன் அருணாச்சலம் (29). இவர் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 18-ந்தேதி சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் இன்று காலை திடீரென இறந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அவர் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திரண்டனர். அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.

காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!

நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel