ஜம்மு காஷ்மீர்: பரபரப்பான சந்தையில் காவலரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதி - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் லால் சௌக் என்ற பரபரப்பான சந்தையில் பணியில் இருந்த காவலர் பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்டதன சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

நேற்று மதியம் 12:30 மணியளவில் அனந்த்நாக் லால் சௌக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு நடந்து வந்த பயங்கரவாதி ஒருவன், காவலரின் மிக அருகில் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சந்தைக் கூட்டத்திற்குள் புகுந்து தப்பி ஓடினான்.

தாக்குதலில் படுகாயமடைந்த ஆஷிக் ஹுசைன் குரேஷி (35) என்ற ஹெட் கான்ஸ்டபிள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து அனந்த்நாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தங்கள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தப்பிச் சென்ற பயங்கரவாதியைப் பிடிக்க அப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, பிரதான சாலைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தாக்குதலின் கொடூரமான சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்றும், தடையை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதன்பின்னர் வெளிப்படையாக நடத்தப்பட்ட முதல் தாக்குதலும் அதனால் நேரும் உயிரிழப்பும் இதுவாகும்.

அமர்நாத் யாத்திரை நடைபெற்று வரும் சூழலில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நாம் பயந்துவிட மாட்டோம். மனிதநேயத்திற்கு எதிரான இத்தகைய செயல்களுக்குப் பலமாகப் பதிலடி கொடுக்கப்படும்" என்று உமர் அப்துல்லா சூளுரைத்துள்ளார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel