சுப்மன் கில்லுக்கு அழைப்பு விடுத்த விம்பிள்டன் நிர்வாகம்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் சென்டர் கோர்ட் மைதானத்தில் உள்ள மிக உயர்தர மற்றும் பிரத்யேகமான இருக்கை பகுதிதான் ராயல் பாக்ஸ் (Royal Box).
1922-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர், அரசு தலைவர்கள், பிரபல விளையாட்டு வீரர்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களை கௌரவிக்க இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த 74 இருக்கைகள் கொண்ட பகுதிக்கு பணம் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாது. ஆல் இங்கிலாந்து கிளப் தலைவரின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இங்கு வருபவர்களுக்கு டென்னிஸ் போட்டிகளைத் தவிர்த்து கிளப் ஹவுசில் சிறப்பு மதிய உணவு, தேநீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், விம்பிள்டன் நிர்வாகம் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு ராயல் பாக்சில் அமர்ந்து போட்டிகளைப் பார்வையிட வரும்படி அழைப்பு விடுத்துள்ளது.
முன்னதாக, இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கும் ராயல் பாக்ஸ் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
விம்பிள்டன் தொடரில் தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.