சென்னையில் அரசு பள்ளி குழந்தைகளை இலவசமாக அழைத்து செல்லும் பெண் ஆட்டோ டிரைவர்
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ அசோக். கணவருடன் பிழைப்புக்காக சென்னை வந்த அவர் ஆட்டோ ஓட்ட தொடங்கினார். 27 வருடமாக ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு தற்போது வயது 54.
ஆட்டோ தொழில் மூலம் குடும்பத்தை காப்பாற்றி வந்த ராஜீக்கு பெண் குழந்தைகள், பஸ், ரெயில், ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது பல்வேறு சிரமங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாவதை நேரில் பார்த்து அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்று எண்ணினார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் பாதுகாப்பாக சென்று வர வேண்டும், அதற்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற மன அழுத்தம் ராஜீக்கு ஏற்பட்டது.
அதன் தாக்கம் தான் கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவிகளை இலவசமாக காலையில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் வீட்டிற்கு கொண்டு விடுவதும் தனது கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச பயணம் என்று எழுதப்பட்ட பிங்க் நிற ஆட்டோவை ஓட்டும் ராஜீ தி.நகர், கோடம்பாக்கம், அண்ணா நகர், வால்டாக்ஸ் ரோடு மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மாணவிகளை இலவசமாக அழைத்துச் செல்கிறார்.
காலை 8 மணிக்கு பெரம்பூரில் இருந்து புரசைவாக்கம் டவுட்டன் வரை மாணவிகளை தனது ஆட்டோவில் அழைத்துச் செல்கிறார். அதன் பிறகு வாடகை சவாரிகளுக்கும் செல்லும் அவர் சரியாக மாலை 4 மணிக்கு எந்தப் பகுதியில் இருந்தாலும் அங்குள்ள அரசு பள்ளி மாணவிகளை தன் ஆட்டோவில் ஏற்றி அவர்கள் வசிக்கும் பகுதியில் விட்டு விடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அரசு பள்ளி சீருடையில் மாணவி எங்காவது நிற்பது தனது கண்ணுக்கு தெரிந்தால் உடனே ஆட்டோவை நிறுத்தி அதில் அவரை ஏற்றி சென்று விடுவார். டியூஷனுக்கு செல்லும் மாணவிகளையும் அழைத்துச் செல்கிறார். இப்படி தினமும் பெண் பிள்ளைகளை பாதுகாக்கும் வகையில் இலவசமாக எனது ஆட்டோவில் ஏற்றி செல்வதில் ஆனந்தம் அடைகிறார். இந்த சேவையின் மூலம் அவருக்கு வருமானம் 500 ரூபாய் தினமும் இழந்தாலும் கூட இதன் மூலம் கிடைக்கும் மன நிறைவு, மகிழ்ச்சிக்கு குறைவில்லை என்கிறார் ராஜீ. பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் ஆட்டோ ஸ்டாண்டுகளுக்கு அருகில் காத்து நின்று மாணவிகளை அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
தன்னுடைய குடும்பம் எளிமையான நிலையில் இருந்தாலும் கூட மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மை ஆட்டோ டிரைவர் ராஜீக்கு ஏற்பட்டது பற்றி அவர் வசிக்கும் பகுதி மக்கள் பெருமையாக கூறுகிறார்கள்.
வசிக்கின்ற வீடு வாடகை என்றாலும் ஓட்டுகின்ற ஆட்டோவிற்கு தினமும் 250 ரூபாய் வாடகையாக கொடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும் கூட மனம் தளராமல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையுடன் அவர் செயல்படுவது பாராட்டுக்குரியது. அவரது சேவையை பார்த்து வாடகை வீட்டின் சொந்தக்காரர் குறைவாகவே வாடகை பெறுகிறார். எனது ஆட்டோவில் பெண்களுக்கு அவசரமாக தேவைப்படும் பொட்டு, ஹேர்பின், நாப்கின் மற்றும் குடிநீர் பாட்டில், பிஸ்கட் போன்றவற்றை வாங்கி வைத்து இலவசமாக வழங்குகிறார்.
இந்த சேவையை செய்து வரும் ராஜீ இணையும் கைகள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தத்தக்கது.
தினமும் ஆட்டோ ஓட்டி ரூ.1500 சம்பாதிக்க வேண்டும் என்று இலக்கோடு செயல்படுகிறார். அதற்காக இரவு-பகல், மழை-வெயில் என்று பாராமல் கடினமாக உழைக்கிறார்.
சென்னையில் எத்தனையோ பெண்கள் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் நிலையில் கேரள பெண்ணான ராஜீ பள்ளி மாணவிகளுக்காக இலவச பயணம் மேற்கொள்வது காண்போரை வியப்படையச் செய்கிறது. அவருடைய மன வலிமையும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் பெண் சமுதாயத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
சென்னை மக்களோடு இணைந்த கேரளப் பெண் ராஜீக்கு பெண்களுக்கு உதவ வேண்டும், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது என்று அவரின் மறுபக்கம் சுவாரசியமாக உள்ளது. அது குறித்து ராஜீ கூறியதாவது:-
நான் பி.ஏ. தத்துவயியல் பட்டப்படிப்பை முழுமையாக படிக்க முடியவில்லை. நானும் எனது கணவரும் திருமணம் செய்து கொள்வதற்காக 1992-ம் ஆண்டு பாலக்காட்டில் இருந்து ஓடி வந்து விட்டோம். அதனால் நாங்கள் இருவரும் எங்கள் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்த வேண்டி இருந்தது. வீட்டை விட்டு வந்த பிறகு அது வாழ்க்கைக்கான போராட்டமாக அமைந்தது.
திருமணத்திற்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் பெற்று ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டோம். எங்கள் கல்வி முழுமையாக முடிந்திருந்தால் எங்கள் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் அடிக்கடி நினைப்பேன்.
பட்டப்படிப்பை நான் முடித்து இருந்தால் எனது வாழ்க்கை வேறு விதமாக அமைந்திருக்கும். எனது படிப்பு தடைப்பட்டதால் நான் இந்த தொழிலுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் கல்லூரியில் படித்து வருகிறார். மாணவிகள் தங்கள் கல்வியை பாதியில் கை விடக்கூடாது என்பதற்காக என்னால் முடிந்த உதவியை செய்ய லட்சியமாகக் கொண்டு இந்த பணியை செய்கிறேன். அதனால் படிக்கக்கூடிய மாணவிகளை பார்த்தால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. என் மகனோடு தங்கி தற்போது ஆட்டோ ஓட்டு வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.