ரெயிலில் விதிமீறல், சக பயணிகளுக்கு இடையூறு செய்தால் அபராதம்..!- சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம்
சென்னை மெட்ரோ ரெயிலில் விதிமீறல், மற்றவர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மெட்ரோ ரெயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
மெட்ரோ ரெயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோதண்டனைக்குரிய குற்றமாகும்.
குறிப்பாக:
• அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல்;
• செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (Headphones) இன்றி இசை அல்லதுவீடியோக்களைப் பார்ப்பது.
• அலைபேசியில் மெட்ரோ ரெயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல்(Speaker mode).
மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் அலைபேசிகளைப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) 19.06.2026 அன்று வெளியிட்ட அரசிதழ் (Gazette) அறிவிப்பின்படி,'ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026'-இன் கீழ் ஒரு புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, மெட்ரோ ரெயில் மற்றும் அதன் வளாகங்களில் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் (உதாரணமாக: செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கிஇல்லாமல் உரத்த சத்தத்தில் பாட்டு கேட்பது போன்றவைகளில்) ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகை, பிரிவு 59-இன் கீழ், முன்பிருந்த ரூ.500-லிருந்து தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 வரைஉயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், விதிகளை மீறும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் செவியில் பொருத்திகொள்ளும் ஒலிபெருக்கியை (Headphones) பயன்படுத்துமாறும், மெட்ரோ ரெயில் மற்றும் அதன்வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.