தமிழகத்தில் ஆள் பிடிக்கும் ஆட்சி தான் நடக்கிறது..!- ஆர்.எஸ்.பாரதி
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகருடன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
அப்போது, தமிழக வெற்றிக் கழக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக பொறுப்பு ஆளுநர் அர்லேகரிடம் திமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.
தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தும் விதமாக வைகோ பொதுக்குழுவில் பேசியதை சுட்டிக்காட்டி திமுக புகார் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் ஆளுநர் அர்லேகரிடம் வலியுறுத்தினர்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் வில்சன் மற்றும் ஆஸ்டின் உள்ளிட்டோர் ஆளுநரிடம் புகார் அளித்தனர்.
கரூர் சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியது குறித்தும் ஆளுநரிடம் திமுக புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-
அவதூறு வழக்கில் கைது நடவடிக்கை தேவையில்லை, பதவி விலகி தவெகவில் இணையுமாறு அனிதா ராதாகிருஷ்ணன் மிரட்டப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள சி.விஜயபாஸ்கா், ஓ.எஸ்.மணியனிடம் தவெகவிற்கு வருமாறு அழைத்துள்ளாா்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினிடமும், ராஜினாமா செய்து விட்டு வந்தால் அமைச்சரவையில் இடம் தருவதாக தவெக பேரம் பேசியுள்ளது .
வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏவிடமும் தமிழக வெற்றிக் கழகத்தினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆள் பிடிக்கும் ஆட்சி தான் நடக்கிறது, ஆக்கப்பூா்வமாக ஏதும் தவெக ஆட்சியில் நடக்கவில்லை.
தமிழ்நாட்டில் தவெக நடத்தும் குதிரை பேரம் குறித்து ஆளுநாிடம் நேரடியாக விளக்கினோம் .
ஜான் ஆரோக்யசாமி, விஷ்ணுரெட்டி ஆகியோர் அமைச்சர்களை விட அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.
அவர்கள் இருவரும் அதிகாரிகளுக்கு உத்தரவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் ஜான் ஆரோக்யசாமி, விஷ்ணுரெட்டி கலந்து கொண்டனர்.
அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்றால் ஜான் ஆரோக்யசாமி அமைச்சராகி இருக்கலாமே என ஆளுநா் எங்களிடம் கூறினாா்.
அனிதா ராதாகிருஷ்ணனை 5 மணி நேரம் துன்புறுத்தியுள்ளனர். அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது தவெக அரசு.
5 திமுக ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்கெல்லாம் யாரையும் கைது செய்ததில்லை. முதல்வர் விஜய் முன்னிலையிலேயே அதிகாரிகளுக்கு தனி நபர்கள் உத்தரவு போடுகின்றனர்.
தவெக குதிரை பேரம் செய்து வருவதாக ஆளுநரிடம் புகார் அளித்தோம். ரூ.50 கோடி தருவதாகக் கூறி வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ சீனிவாசனிடமும் குதிரை பேரம் நடத்தியது தவெக.
நீங்கள் இளைஞர், தவெகவுக்கு வாருங்கள் என சீனிவாசனை அழைத்துள்ளனர். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திமுகவை தொடர்ந்து அதிமுக பிரதிநிதிகளும் ஆளுநர் அர்லேகர்கருடன் சந்தித்துள்ளனர். தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி அதிமுகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.