எல்பிஜி நெருக்கடிக்கு 7 நாட்களில் தீர்வு காணப்பட்டது- பிரதமர் மோடி

எல்பிஜி நெருக்கடிக்கு 7 நாட்களில் தீர்வு காணப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் 21ம் நூற்றாண்டில் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியது.

கடின உழைப்பு, முயற்சி, பொறுமை, ராஜதந்திர நடவடிக்கைகளால் எரிசக்தி நெருக்கடியை முறியடித்தோம்.

சில சக்திகள் வதந்திகளை பரப்பி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த மும்முரமாக இருந்த போதிலும் அதனையும் முறியடித்தோம்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை அரசாங்கம் வழங்கியது. பாஜக அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவிட்டு அப்படியே விட்டுவிடுவதில்லை.

அடிக்கல் நாட்டிய திட்டங்கள் நிறைவடைவதை உறுதி செய்ய நாங்கள் இரவும், பகலும் உழைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் சென்றார். அங்கு அவர் ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். அத்துடன் பார்மர் மாவட்டம் பச்பத்ராவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

பிரதமர் திறந்து வைக்க இருக்கும் ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையத்தை அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா நேற்று ஆய்வு செய்தார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

அத்துடன் நீண்ட காலமாக காத்திருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் திறந்து வைத்தார். இது மாநிலத்திற்கு மிகப்பெரிய மைல்கல் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையம் 29 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. நாட்டின சாதாரண குடிமகனும் விமானத்தில் பயணிக்கட்டும் என்ற உடான் திட்டத்தின் கீழ் இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ஆளுநர் ஹரிபாவ் கிசன்ரவா் பாக்டே, மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, கஜேந்திர சிங் ஷெகாவத், முரளிதர் மோஹோல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel