மக்கள் தங்கள் பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்!

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் அர்லேகர் உரையாற்றினார்.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசுகையில், "பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனதுதான் பிகப்பெரிய பிரச்சனை, ஆதலால் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க த.வெ.க. அரசுடன் இணைந்து செயல்படுவேன்.

தேவைப்பட்டால் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு நானே நேரடியாக முதலிமைச்சரிடம் கூறுவேன். ஆளுநரிடமும் அரசிடமும் எதிர்பார்ப்பு இருந்தால் மக்கள் தங்களது தேவைகளை உடனடியாக தெரிவிக்கலாம். நாங்கள் ஒன்றிணைந்து மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்" என்று தெரிவித்தார்.

மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய ஆளுநர் அர்லேகர், "துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போருக்கு போவது மட்டும் தேசபக்தி கிடையாது. நதிகளை மீட்டெடுப்பதும் தேசபக்திதான். மதுரை வைகை நதியில் நதி இருக்கிறது. ஆனால், தண்ணீர் எங்கே? இளைஞர்கள் நதியை மீட்க முன்வர வேண்டும். வைகை நதியை யாரும் சீரமைக்காவிட்டால் நேரடியாக ஆளுநர் மாளிகையே களமிறங்கும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகர ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து நலத்திட்டங்களையும் ஆய்வு செய்திருந்தார்.

இதையடுத்து நலத்திட்டங்களை ஆளுநர் ஆய்வு செய்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆளுநர் எதற்காக ஆய்வு செய்ய வேண்டும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோரும் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், மக்கள் தங்கள் பிரச்சனையை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என்று ஆளுநர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel