காதலால் செதுக்கப்பட்ட எஸ்கலேட்டர்: மூட்டு வலியால் தவித்த மனைவிக்காக 20 நாளில் விவசாயி செய்த அற்புதம்
‘காதலின் சின்னமாக தாஜ்மகாலை கட்டினான் ஷாஜகான். அவன் மன்னன். தன் மனைவி மீது கொண்ட காதலால் அவளுக்காக இந்த தாஜ்மகாலை மட்டுமல்ல உலகத்தில் எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கும் வசதியும் வாய்ப்பும் அவனிடம் இருந்தது. ஆனால் இந்த சாதாரண விவசாயி தன் மனைவி படும் கஷ்டத்தை உணர்ந்து அதற்காக கண்டுபிடித்து இருக்கும் இந்த எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) தாஜ்மகாலை விட அதிசயமாக பேசு பொருளாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் ஆருடமுரு கிராமத்தை சேர்ந்தவர் சட்டி சிவநாராயண ரெட்டி. சாதாரண விவசாயி. 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். விவசாயத்தை தனது அனுபவத்தால் சிறப்பாக செய்து வருபவர். பெரிய அளவில் படிக்க முடியாவிட்டாலும் மின்சாரத்துறையும், எந்திரவியலும் இவருக்கு ரொம்ப படித்தது.
அது சம்பந்தமான தொழில்நுட்பங்களை எல்லாம் ஆர்வத்தோடு பார்ப்பவர். இவரது மனைவி மூட்டு வலி காரணமாக வீட்டில் கூட படிக்கட்டுக்களில் ஏறுவதற்கு சிரமப்பட்டு வருகிறார். மனைவியின் கஷ்டத்தை பார்த்த நாராயண ரெட்டிக்கு அவருக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வம் வந்து இருக்கிறது. பெரிய ஜவுளிக்கடைகளில் எஸ்கலேட்டர்களில் சென்று வந்த நாராயண ரெட்டிக்கு அதே போல் தனது மனைவியும் வீட்டில் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு பதிலாக ஒரு எஸ்கலேட்டர் செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றி இருக்கிறது.
பொறியியல் படிப்போ, முறையான தொழில்நுட்ப பயிற்சியோ பெறாதவர். ஆனால் முயற்சி மட்டும் இருந்து இருக்கிறது. தனது மனைவிக்கு எப்படியாவது எஸ்கலேட்டரை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வமும் தீவிரமாக இருந்து இருக்கிறது. அதன் விளையாக எஸ்கலேட்டரை தயார் செய்ய தொடங்கி இருக்கிறார்.
அவர் நினைத்த மாதிரியே 300 கிலோ எடையை தாங்கும் வகையில் ஒரு எஸ்கலேட்டரை வடிவமைத்து தயார் செய்து விட்டார். இதற்கு ஆகி இருக்கும் செலவு ரூ.70 ஆயிரம்தான். ஆனால் இதையே ஒரு முன்னணி நிறுவனங்களை அணுகி அமைக்க செய்தால் சில லட்சங்கள் ஆகும்.
வெறும் 20 நாட்களில் இந்த எஸ்கலேட்டரை உருவாக்கி இருக்கிறார். இந்த எஸ்கலேட்டர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துகிறது. பாதுகாப்பாகவும் வடிவமைத்து இருக்கிறார்.
இப்போது வீட்டு மாடியில் இருந்து படிக்கட்டுக்கள் வழியாகதான் தயாரித்து கொடுடுத்த 2 படிக்கட்டுக்களை கொண்ட எஸ்கலேட்டர் வழியாக வலி இல்லாமல் சிரித்தபடியே இறங்கும் மனைவியை பார்த்து புன்னகை பூக்கிறார்.
எஸ்கலேட்டர் தயார் செய்தது கூட பெரிய விசயமாக தெரிந்து இருக்காது. நமது கணவர் நம் மீது இவ்வளவு பாசம் வைத்து அக்கறையோடு இதை செய்து இருக்கிறாரே என்றுதான் அந்த பெண்மணி கணவரை நினைத்து பூரித்து போகிறார்.
வெறும் படிப்பால் மட்டும் சாதித்து விட முடியாது. நாட்டில் எவ்வளவோ படிக்காத மேதைகளும் இருந்து இருக்கிறார்கள். தேவையும், மனதில் உறுதியும் இருந்தால் புதுமைகள் பிறக்கும். எதையும் சாதிக்கும் ஆற்றலும் பிறக்கும் என்பதற்கு இந்த படிக்காத மேதையும் ஒரு சாட்சி.