கோவை: 7-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது
கோவை,
கோவை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த மாணவன் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வரும் திருப்பூர் முதலிபாளையத்தை சேர்ந்த காதர் மொய்தீன் (31) அங்கு வந்தார். அவர் அந்த மாணவனை கிரிக்கெட் விளையாட பந்து வாங்கி தருகிறேன் என்று கூறி அழைத்துச்சென்றார்.
பின்னர் அவர் அந்த மாணவனை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததுடன், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவனுக்கு சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்பட்டு உள்ளது. உடனே அவன் தனது தந்தையிடம் நடந்ததை கூறி அழுதான். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கருமத்தம்பட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், காதர் மொய்தீன் அந்த சிறுவனை அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காதர் மொய்தீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பகிரவும்: