“வெள்ளி மாலை போனால் திங்கள் தான் வருவார் அதிசய முதலமைச்சர்” - இபிஎஸ் தாக்கு!
தமிழ்நாட்டில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில் தாராபுரம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் கட்சி வேட்பாளர் பானுமதியை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மானூர்பாளைய மக்களிடையே அவர் பேசியதாவது;
இந்த இடைத்தேர்தல் ஒரு பாடமாக அமையவேண்டும். ராஜினாமா செய்துவிட்டு சென்றவர்களுக்கு நீங்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
லண்டன் சென்றார் முதலமைச்சர் விஜய். யாரோடு சென்றார் என உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் ஏற்கனவே தொழில் நடத்தி வரும் நிறுவனத்தினரையே அங்கு அழைத்து ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.
ஏன் சென்னையிலேயே ஒப்பந்தம் போட்டிருக்கலாமே? இந்த முதல்வர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் சிந்தியுங்கள், எதுக்கு லண்டன் போனார் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
எதைப் பேசினாலும் மக்கள் கேட்பார்கள் என்பது தவறு. சினிமா போல நிஜ வாழ்க்கையிலும் நடித்தால் சரிவராது. ஜனநாயகன் படம் வந்தால் வசூல் கொட்டும் என்றனர், ஆனால் காத்து வாங்கிவிட்டு போய்விட்டது.
தேர்தலுக்கு முன்பு படம் வெளியாகியிருந்தால் இவரது வேஷம் கலைந்துபோயிருக்கும். உங்களைப் பற்றி முழுமையாக மக்கள் தெரிந்துகொண்டனர். இனியும் ஏமாற்ற முடியாது.
ரீல் விடுவது, ரீல்ஸ் போடுவது இதுதான் தவெகவின் மூலதனம். இனியும் இது எடுபடாது, நிஜத்துக்கு வாங்க. சட்டமன்றத்தில் தவெக, திமுக சண்டையிட்டே நேரம் போய்விட்டது, மக்கள் பிரச்னையை பேசுவதே கிடையாது. நான் 50 நிமிடம் பேசியும் அதற்கு பதிலே சொல்லவில்லை.
சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுகிறார். அப்போது யாருமே பிறந்திருக்க மாட்டார்கள். திமுகவுக்கு கோபத்தை உண்டாக்கி சட்டமன்றத்தை முடக்குவது தான் முதல்வர் எண்ணம் என்பதை தெரிந்துகொண்டேன். இப்படிப்பட்ட முதல்வர் தேவையா?
கோட் சூட் போட்டு வருவார், கூட்டம் நடக்கும், பத்திரிகையில் படம் வரும், அங்கும் ஒன்றும் பேச மாட்டார். பேசிய மாதிரி அறிவிப்பு வரும். காலை 10 முதல் மாலை 5 மணி வரை இருக்கிறார். வெள்ளி மாலை போனால், திங்கள் தான் வருவார். இப்படிப்பட்ட அதிசய முதல்வர் விஜய் மட்டும் தான்.
நம் வெற்றி வேட்பாளர் ஏற்கனவே மக்கள் பணியில் இருந்தவர், அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்.” என்றார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel