தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக 25 மதுபான வகைகள் அறிமுகம்

தமிழகத்தில் 4,000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு தமிழகத்தில் தயாரிக்கப்படும் 174 மது வகைகள், 40 பீர் வகைகள், 4 ஒயின் வகைகள் மற்றும் பிற மாநில மது​பானங்களில் 6 மது வகைகள், 5 பீர், 5 ஒயின் வகைகள் விற்கப்படுகின்றன. 538 வெளிநாட்டு ரக மது வகைகளை டாஸ்மாக் நிறுவனம் இறக்குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மதுக்கடைகளில் விற்பனை செய்கிறது.

டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது புதிய மது வகைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், புதிய மது வகைகளை அறிமுகம் செய்வது தொடர்பாக மதுபான உற்பத்தியாளர்களுடன் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 25 புதிய மது வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், “டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் புதிய வகை மதுபானம், பீர் விற்பது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், 25 புதிய மது வகைகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது. டாஸ்மாக் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, மதுக்கடைகளில் புதிய வகை மதுபானங்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு சரக்கு அனுப்பும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல், ஒவ்வொரு கடையின் உண்மையான தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே சரக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து சப்ளையர்களின் சரக்குகளையும் சமமாகப் பிரித்து வழங்கும் முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் விற்பனையாகாமல் தேங்கும் சரக்குகள் குறைவதுடன், அதிகம் விற்பனையாகும் பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel