தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 17-ந்தேதி விருதுநகரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டம் அடுத்தடுத்து வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் வாரத்தின் 5 நாட்களும் மாணவ, மாணவிகளுக்கு ரவா உப்புமா, ரவா கிச்சடி, வெண் பொங்கல், சேமியா கிச்சடி, ரவா கேசரி மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை தி.மு.க. அரசு விரிவாக்கம் செய்தது.

இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில் காலை உணவு திட்டத்தை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.268 கோடி நிதி நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.

வருகிற செப்டம்பர் 17-ந்தேதி பெரியார் பிறந்தநாளன்று மதிய உணவு திட்டத்தை தந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில் இந்த திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த கே.வி.எஸ். (காமராஜ் வித்யாசலா) நடுநிலைப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வரை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. எனினும் விழா நடைபெறுவதாக கூறப்படும் கே.வி.எஸ். பள்ளியில் தற்போது இருந்தே முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கே.வி.எஸ். பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முதலமைச்சர் வரும் வழித்தடங்கள், விழா நடைபெறும் இடம், மாணவ, மாணவிகளை சந்திப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

விருதுநகர் கே.வி.எஸ். (காமராஜ் வித்யாசலா) பள்ளியில் ஒருபுறம் இதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரின் வருகை குறித்து தற்போது வரை அரசு சார்பில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel