எதிர்பார்த்த படங்கள் தோற்கும், எதிர்பாராத படங்கள் வெல்லும் - நயன்தாரா
யாஷ், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'டாக்ஸிக்' திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்த்துகீசிய ஆட்சின்கீழ் இருந்த கோவாவை பின்னணியாகக் கொண்டு அமைந்துள்ளது.
இப்படத்தில் யாஷ் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கிட்டத்தட்ட ரூ 600 முதல் 800 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியது.
ஆகஸ்ட் 26 அன்று உலகெங்கிலும் வெளியாகிய இப்படம் எதிர்மறை விமர்சனங்கள் வந்தபோதும் பாக்ஸ் ஆபீசில் ரூ.100 கோடியை கடந்துள்ளது.
சமூக வலைதளங்களில் இப்படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாரா இதுகுறித்து மனம் திறந்துள்ளார்.
படத்தின் முடிவுகள் குறித்துப் பேசிய அவர், "திரைத்துறையில் உள்ள அனுபவம் ஒரு படம் எவ்வாறு உருவாகிறது என்பது குறித்த அடிப்படை புரிதலை வழங்கக்கூடும்.
ஆனால் சினிமா என்பது மிகவும் உணர்வுப்பூர்வமானது. எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது. எனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று நான் பெரிதும் எதிர்பார்த்த சில படங்கள் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளன.
அதே வேளையில், சில படங்களின் முடிவுகள் குறித்து எனக்கே சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அவை வசூல் ரீதியாக எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆச்சரியப்படுத்தின.
திரைத்துறையில் எனது இத்தனை ஆண்டுகால பயணம் எனக்கு ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது. ஒரு படத்தின் வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாதிரியாக, அடக்கத்துடன் ஏற்றுக்கொள்ள நான் பழகிக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel