கொலை வழக்கில் 40 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த தனிப்படை போலீசார்
டெல்லியில் கடந்த 1984-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த 65 வயது நபரை, உத்தரப் பிரதேச குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் விகாஸ்புரியில் உள்ள ஒரு பூங்காவில் கடந்த 1984 ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி இரவு அசோக் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை அடுத்து ஹர்தோய் பகுதியை சேர்ந்த நத்து என்ற 23 வயது நத்துலால் என்பவரை ஜனக்புரி காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.
அசோக் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில், சீதாபூரை சேர்ந்த பாபூதி பிரசாத் என்பருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம், கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்தனர். இருப்பினும் நத்து என்ற நத்துலாலை கைது செய்ய முடியாமல் காவல்துறை திணறி வந்தது.
இதையடுத்து நத்துலாலை கண்டுபிடிக்கும் பணியை குற்றப்பிரிவு தீவிரப்படுத்தியது. ஒரு குழு அமைக்கப்பட்டு, பழைய வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்து, சீதாபூர் மற்றும் ஹர்தோய் மாவட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் நடமாட்டம் இருப்பதாக காவல்துறை உறுதி செய்தது.
ஹர்தோயின் பாலி பகுதியில் நடத்திய சோதனையின்போது, நத்துலால் உயிருடன் இருப்பதாகவும், அவ்வப்போது தனது சொந்த கிராமத்திற்குச் சென்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் அறிந்துகொண்டனர்.
ஆகஸ்ட் 17 அன்று, அவரது அடையாளங்களுடன் பொருந்தக்கூடிய ஒருவர் கிராமத்தில் தென்பட்டதை அடுத்து, அந்த கிராமத்தை சுற்றிவளைத்து காவல்துறை நத்துலாலை கைது செய்தது.
இதுகுறித்து காவல்துறை கூறுகையில், “நத்துலாலும் பிரசாத்தும் நண்பர்கள், மேலும் இறந்தவரும் பிரசாத்தும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
பிரசாத்தின் மனைவியிடம் கொலை செய்யப்பட்ட அசோக் குமார் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்கு காரணமாக உள்ளது.
சம்பவம் நடந்த அன்று இரவு, நத்துலாலும் பிரசாத்தும் ஒரு பூங்காவில் ஒன்றாக மது அருந்தி, பின்னர் அசோக்கை கொலை செய்யும் நோக்கில், அவரை பிந்தொடர்ந்து கொலை செய்துள்ளனர்.
நத்துலால் தலைமறைவாக இருந்தபோது, உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மொத்த காய்கறிச் சந்தைகளில் பணிபுரிந்து வந்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்துள்ளார். மேலும், அவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்தார்.
2005-ஆம் ஆண்டு ஃபரூக்காபாத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது” என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel