குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: உறவினரை அழைத்து வந்து கணவரை அடித்துக் கொலை செய்த மனைவி
டெல்லியில் 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவரை தனது மருமகள் வீட்டார் அடித்து கொலை செய்து விட்டதாக, உயிரிழந்த பொறியாளரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மனைவி உள்பட நான்கு பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
வினய் நொய்டாவில் உள்ள அடோப் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்று வந்துள்ளார்.
இவர், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரேகா என்பவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.
டெல்லியில் உள்ள வீட்டில், வினய்-யும் அவரது மனைவியும் மூன்றாவது மாடியிலும், வினய்யின் பெற்றோர்கள் கீழ்தளத்திலும் வசித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இன்று காலை வினய் குப்தாவுக்கும் அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே, தங்கள் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ரேகா வீட்டில் இருந்து வெளியேறி, தனது தந்தை, இரண்டு சகோதரர்கள், மாமா என குடும்ப உறுப்பினர்களை வினய் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. அதைத் தொடர்ந்து ரேகாவின் குடும்ப உறுப்பினர்கள் வினயை தாக்க தொடங்கியுள்ளனர்.
இன்று நடந்த சம்பவம் குறித்து வினய்யின் தாய் கூறுகையில், ”மருமகளின் குடும்பத்தினருக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி வருவதற்காக வெளியே சென்றேன்.
நான் திரும்பி வந்தபோது, என் மகனை மருமகளின் வீட்டார் தாக்கிக்கொண்டு இருந்தனர். நான் உடனே தாக்குதலை நிறுத்துமாறு அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால் என் மகன் மீது தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டது.
மருமகளின் வீட்டார், எனது மகனின் கழுத்தை நெரித்து, மார்பில் உதைத்து தாக்கினர். இந்த சம்பவத்தை முன்கூட்டியே திட்டம் தீட்டி, எனது வீட்டில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ரேகா அணைத்துவிட்டார்” என்று அவர் கூறினார்.
தாக்குதல் நடந்த சில நிமிடங்களுக்கு பிறகு, வினய்-யின் பக்கத்து வீட்டுக்காரர் உள்ளே வந்து, அவரை தோளில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வினய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ரேகா, அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் அண்ணி என நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel