தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

காணாமல் போகவில்லை - கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி ஞானேந்திர குமார் விவகாரத்தில் அமைச்சர் பிரியங்க் கார்கே விளக்கம்!

2016-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேந்திர குமார், தற்போது கர்நாடக தொழில் மற்றும் வர்த்தகத் துரையின் MSME இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த வியாழக்கிழமை முதல் இவரது அதிகாரபூர்வ அரசு தொலைபேசி எண் செயலில் இல்லை அதனால் இவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வரை அவர் சென்றதும், அங்கிருந்து டெல்லிக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அவர் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுக்கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியவர் என்பதால், அங்கு நடந்த ED சோதனைகளுக்குப் பயந்து அவர் தலைமறைவாகிவிட்டார் என செய்திகள் பரவின.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரியங்க் கார்கே, "அதிகாரி ஞானேந்திர குமார் எங்கும் செல்லவில்லை. இது வெறும் தகவல் தொடர்பு இடைவெளியால் ஏற்பட்ட குழப்பம். அவரது தந்தை ஒரு இதய நோயாளி.

திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அதிகாரி உடனடியாகச் சொந்த ஊருக்குக் கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்றார்.

அதிகாரி ஞானேந்திர குமார் அவசரமாகக் கிளம்புவதற்கு முன், தனது தவிர்க்க முடியாத சூழ்நிலையைக் குறிப்பிட்டு ஒரு வார கால விடுப்பு வேண்டி கையால் எழுதப்பட்ட கடிதத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.

ஆனால், அதற்கு முந்தைய நாள் அரசு விடுமுறை என்பதால், அரசு அலுவலகங்கள் முழுமையாகச் செயல்படவில்லை. இதனால் அந்த விடுப்புக் கடிதம் உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை என அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமைச்சர் பிரியங்க் கார்கே அந்த அதிகாரியைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது அதிகாரி ஞானேந்திர குமார், "தந்தையின் இக்கட்டான சூழ்நிலை மற்றும் பயணத்தில் இருந்ததால் என்னைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இன்னும் சில நாட்களில் பெங்களூரு திரும்பி விடுப்புக்கான அரசு நடைமுறைகளை முடிப்பேன். என் மீது தற்போது எந்தப் புகாரும் இல்லை. அப்படியே ஏதேனும் முகமைகள் விசாரணை நடத்த உத்தரவிட்டால், அதைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் மூலம் கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி திடீரென காணாமல் போனதாக எழுந்த அத்தனை சர்ச்சைகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel