மோசடி செய்து பழனி கோயில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனு!

பழனி கோயில் நில மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த மனுவில் சிபிசிஐடி போலீசாரைப் பதில் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (ஜூலை.22) ஒத்திவைத்துள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை அடிவாரத்தில், கோயில் மடத்திற்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் தற்போது பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.

இதனை வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் வாங்கியுள்ளார்.

சட்டப்படி கோயிலுக்கு சொந்தமான நிலத்தைத் தனியாருக்கு விற்கவோ, கைமாற்றவோ தடை உள்ளது. ஆனால் இதனை மீறியும் மடத்தின் வாரிசு என்று போலியாகக் கூறிக்கொண்ட விழுப்புரம் முருகதாஸ் என்பவரிடமிருந்து, வெள்ளத்துரை மற்றும் பழனியைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவரும் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றியுள்ளனர்.

இந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதில் சம்பந்தப்பட்ட, இந்த நிலப் பதிவை மேற்கொண்ட பழனி சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் இந்த மோசடிப் பதிவு செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. மேலும் பத்திரப்பதிவுத்துறை சார்பிலும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel