Tamil News & polling
சென்னை,
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை விக்ஷித் பாரத் – ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிசன் என்று மத்திய பாஜக அரசு மாற்றப் போவதாகவும் அதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய சட்டத் திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வர போகிறது. இதன்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்பு, மத்திய அரசு 60 சதவிகிதம் மாநிலங்கள் 40 சதவிகிதம் என நிதிப் பகிர்வு முறை, தினசரி ஊதியம் வாராந்திர அடிப்படையில் வழங்கல், விவசாயப் பருவத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், ஒரு நிதியாண்டில் 60 நாட்களுக்கு வேலை வழங்கப்படாது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப் போகிறார்கள். இவை அத்தனையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்கும் செயல்பாடுகள்.
“கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு. கிராம மக்கள் மேம்பட வேண்டும்’’ என்ற மகாத்மா காந்தியின் உன்னதக் கொள்கையைச் செயல் வடிவம் ஆக்கியது மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான பிரதமர் மன்மோகன் ஆட்சியில் 2006-ல் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
கல்வி உரிமை, உணவு பாதுகாப்பு உரிமை, தகவல் அறியும் உரிமை என்ற வரிசையில் மக்களுக்கு உரிமையாக திமுக அங்க வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்திய அரசு 2005-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டம் என்ற புரட்சிகரமான திட்டதையும் செயல்படுத்தியது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயன் அடைந்து வந்தார்கள். கிராமப்புறத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது.
இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தை மோடி அரசு அமைந்த பிறகு முடக்க ஆரம்பித்தார்கள். "காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்வியின் அடையாளச் சின்னமாக தொடர விரும்புகிறேன்" என பிரதமர் மோடி கூறியபோதே திட்டத்தை சின்னாபின்னமாக்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துவிட்டது என்பது அப்பட்டமாக தெரிந்துவிட்டது.
திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 2021-2022-ல் 98,468 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் 2022 – 2023-ல் 73,000 கோடி ரூபாயும் 2023-2024-ல் 60 ஆயிரம் கோடி ரூபாயும் என ஆண்டுதோறும் நிதியைக் குறைத்தார்கள். 2023-2024-ல் ஒதுக்கப்பட்ட தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.198 சதவீதம்தான். இந்தப் பற்றாக்குறையால் ஆண்டுக்குச் சராசரியாக வெறும் 40 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை உருவானது.
இதனால், கிராமப்புறத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் 2.72 லட்சம் கோடி ரூபாய் தேவை. ஆனால், அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மோடி அரசு கிராமப்புற ஏழைகளை வஞ்சித்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100 நாட்கள் கிடைத்த வேலை, மோடி ஆட்சியில் 30 நாட்கள் கூட கிடைக்கவில்லை. 2021-ம் ஆண்டு முதல் 7.6 கோடி தொழிலாளர்களின் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணி அட்டைகள் நீக்கப்பட்டன. எந்த நோக்கத்துக்காக 100 நாள் வேலைத் திட்டம் தொடங்கப்பட்டதோ, அதனையே மோடி அரசு படுகொலை செய்தது.
கொரோனா பேரிடரில் இந்தத் திட்டம்தான் கிராமப்புற மக்களைக் காப்பாற்றியது. கோடிக்கணக்கான மக்களைப் பட்டினி கொடுமையில் இருந்து பாதுகாத்தது. முதல் கொரோனா ஊரடங்கின் போது 11 கோடி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் வாழ்வாதாரமாக விளங்கியது.
மகாத்மா காந்தி மீதான ஒவ்வாமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் பிரதமர் மோடி. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற பெயரை மாற்றி, மகாத்மா காந்தியின் பெயரையே இருட்டடிப்பு செய்யச் சதி நடக்கிறது. மகாத்மா காந்தி பெயரையே அகற்றுவது பாஜகவின் வேறுப்பரசியலை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. ‘’காந்தி திரைப்படம் வந்த பிறகுதான் நாட்டு மக்களுக்கே காந்தியை பற்றி தெரிய வந்தது’’ என்று முன்பு திருவாய் மலர்ந்த மோடி, காந்தியின் பெயரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இருந்து நீக்குவது பெரிய விஷயமாக தெரியாது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் ’100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து 150-ஆகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்’ என திமுக வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதிக்கு பிறகுதான் தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்கும் அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்கும் அறிவிப்பை வெளியிட்டார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குத் தினசரி ஊதியம் ரூ.294 ஆக இருந்தநிலையில், ரூ. 319ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள். வாக்குப்பதிவுக்குச் சில நாட்கள் இருக்கும் போதுதான் மக்கள் மீது மோடிக்குக் கரிசனம் ஏற்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு இந்தத் திட்டத்தில் தனது நயவஞ்சகத்தைக் காட்டிவிட்டார் பிரதமர் மோடி.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிக அளவிலான பணியாளர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்திருக்கின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress