தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

பழனியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் சி.பி.சி.ஐ.டி. தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரப்பகுதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து 88 பேரிடம் விசாரணை நடத்தினர். 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ், பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ், வக்கீல் அன்வர்தீன் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதில் வக்கீல் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையிலேயே உயிரிழந்தார். மற்ற 5 பேரும் மதுரை சிறையில் உள்ளனர். இவர்கள் ஜாமின் கேட்டு அளித்த மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் எவ்வித தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது வீட்டில் இருந்த கணினி, ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றி வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் மேலும் ஒரு பத்திர எழுத்தர் சிவக்குமார் உள்பட 5 பேர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் கடந்த 2 மாதமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.

இந்த மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளி குறித்தும் இதற்கு பின்புலத்தில் இருந்த மற்ற நபர்கள் குறித்தும் துப்பு கிடைக்கவில்லை. முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதால் இதுவரை நடத்திய விசாரணை அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். தற்போது சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தினர் நடமாட்டம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் உள்ளது. அவர்களது செல்போன், வாட்ஸ்அப் உரையாடல்கள் சமூக வலைதளப்பதிவுகள், வங்கி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் ஆகியவற்றையும் கண்காணித்து வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel