அவர் ஒரு ஹீரோ.. பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானியை பாராட்டிய அதிபர் டிரம்ப்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற ப்ளை துபாய் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட்டது. அப்போது விமானம் கிளம்பி சில மணி நேரத்தில் விமானிகள் உட்கார்ந்திருந்த அறையில் விமானிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அவசரகால சமிஞ்சைகள் இஸ்ரேல் நாட்டிற்கு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்குவாக் 7700 (பொது அவசரநிலை) எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் விமானம் வழக்கத்திற்கு மாறாக சுமார் 15,000 அடி உயரத்தில் தாழ்வாக பறந்தபோது, ஸ்குவாக் 7500 (விமான கடத்தல்) என்ற எச்சரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து இஸ்ரேலிய வான்வெளியும் சிறிது நேரத்தில் மூடப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் விமானம், ஜோர்டன் வான்வெளிக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் யு டர்ன் செய்து சவுதி அரேபியா நோக்கி திரும்பியது.
பின்னர் இந்த விமானம், சவுதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. சவுதியில் தரையிறக்கப்பட்ட பயணிகளை இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு, இஸ்ரேல் வேறு விமானத்தை அனுப்பியது.
இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற பயணிகள் விமானத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு விமானியும், ஓமன் நாட்டை சேர்ந்த ஒரு துணை விமானியும் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமான கடத்தல் சம்பவத்தில் ஓமன் நாட்டு துணை விமானியுடன், இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் விமானத்தை இயக்கிள்ளார். அப்போது அவர் பயணிகளின் விமானத்தை கடத்த முயன்ற ஓமன் விமானியுடன் போராடிய போது, இரும்பு ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து சவுதியில் விமானம் தரையிரங்கிய போது, ஊழியர்கள் இந்திய விமானியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பயங்கரவாதியிடம் இருந்து 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் துணிச்சலாக செயல்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாரை பாராட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரை ஒரு ஹீரோ என புகழ்ந்துள்ளார்.
வெள்ளை மாளிகை ஓவல் அலுவலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த விவகாரம் குறித்த தகவல்களை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக தெரிவித்தார்.
மச்சார் ஒரு "ஹீரோ" என்றும் நேதன்யாகு மற்றும் பிறரால் பாராட்டப்பட்டுள்ளார்.
"அந்த விமானி மிகவும் மோசமான நிலையில் இருந்தார்; அவர் இன்னும் கூட மோசமான நிலையில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஆனால், அந்தச் சூழலிலும் அவர் செயல்பட்ட விதம்... அது ஆச்சரியமாக இருந்தது; ஒரு வகையில் அவர் ஒரு ஹீரோதான்," என்று நெதன்யாகுவுடனான உரையாடலை நினைவு கூர்ந்தபடி டிரம்ப் கூறினார்.
மேலும் சம்பவத்தை விவரித்த டிரம்ப், "விமானி காக்பிட் (விமானி அறை) கதவைத் திறந்து, பின்னோக்கி விழுந்து, உதவிக்காகக் கத்தினார்.
துணை விமானி ஒருவேளை பயங்கரவாதியாகவோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ இருந்திருக்கலாம். அவர் விமானியைக் கத்தியால் குத்தினார்.
விமானம் பின்னர் சவுதி அரேபியாவில் தரையிறங்கியது. இதற்கு முன்னதாக, விமானம் ஓட்டிய அனுபவம் இல்லாத, குழாய் பழுதுபார்க்கும் பணியைச் செய்யும் ஒரு இஸ்ரேலிய பயணி காக்பிட்டிற்குள் நுழைந்து, துணை விமானியை அடக்க உதவினார்." என்றார்.
மேலும் அந்தப் பயணி காக்பிட்டிற்குள் நுழைந்து, துணை விமானியை இருக்கையிலிருந்து வெளியே இழுத்து பின்னோக்கி வீசியதாகவும், அதன் பிறகு மற்ற பயணிகள் அவரை அடக்க உதவியதாகவும் கூறினார்.
டிரம்பின் கூற்றுப்படி, 'ஏர் டிசாஸ்டர்ஸ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை அந்த பயணி அடிக்கடி பார்ப்பதாகவும், அதைப் பார்த்து விமானத்தை ஓட்டுவது எப்படி என்று ஓரளவு கற்றுக்கொண்டதாகவும் கூறினார் என தெரிவித்தார்.
"இது மிகவும் அற்புதமான கதை என்று நான் நினைக்கிறேன். நான் கேட்ட கதை இதுதான். இது உண்மையா என்று எனக்குத் தெரியாது, ஆனால் 'பிபி' (நேதன்யாகு) மற்றும் ஓரிரு ஆரம்பக்கட்டத் தகவல்களிலிருந்து எனக்குக் கிடைத்த கதை இதுதான்," என்று டிரம்ப் கூறினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel