ஆசிய விளையாட்டு சாதனை: வெறும் 13 வயதில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்திய இளம் வீராங்கனை யு ஜிடி!
சீனாவை சேர்ந்த 13 வயதேயான இளம் நீச்சல் வீராங்கனை யுஜிடி, சர்வதேச நீச்சல் அரங்கில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், பெண்களுக்கான 200 மீட்டர் பட்டாம்பூச்சி நீச்சல் பிரிவில் 2 நிமிடங்கள் 5.08 வினாடிகளில் இலக்கை சென்றடைந்து புதிய ஆசிய விளையாட்டு சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2023-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் சாம்பியனான ஜாங் யுஃபெய் படைத்த 2:05.57 வினாடிகள் சாதனையை முறியடித்து, தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
தங்கப் பதக்கமும் புதிய சாதனையும் கைவசமிருந்தாலும், தனது இந்த செயல்பாடு சாதாரணமானதுதான் என்றும், இதைவிட வேகமாக நீந்தத் தன்னால் முடியும் என்றும் யு ஜிடி தெரிவித்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய அவர், தனது தலை அமைவு, கை வீச்சு மற்றும் கால்களின் இயக்கம் ஆகிய நுட்பங்களில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இளம் வயதிலேயே உலகத் தரம் வாய்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் இவரின் இந்த தன்னம்பிக்கை விளையாட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஹேபேய் பகுதியைச் சேர்ந்த யு ஜிடி, தனது ஆறாவது வயதிலேயே நீச்சல் பயிற்சியை தொடங்கினார். கடந்து வந்த குறுகிய காலத்திலேயே பல மைல்கற்களை எட்டியுள்ளார். கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அக்வாடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சீன அணிக்காக வெண்கல பதக்கம் வென்று, உலக சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே பதக்கம் வென்ற மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். மேலும், அமெரிக்காவின் ஒலிம்பிக் சாம்பியனான ரீகன் ஸ்மித் என்பவரையும் 200 மீட்டர் பட்டாம்பூச்சி பிரிவில் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
மிக இளம் வயதிலேயே உச்சகட்ட எதிர்பார்ப்புகளையும் கடும் பயிற்சிகளையும் கையாள்வது இவருக்கு எளிதாக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் தீவிரமான பயிற்சியினாலும் சோர்வினாலும் நீச்சல் விளையாட்டிலிருந்தே விலக எண்ணியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களின் உறுதுணையோடு மீண்டும் களமிறங்கி, தற்போது சர்வதேச அளவில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறார். சாதிக்கும் எண்ணமும், குறைகளை திருத்திக் கொள்ளும் பக்குவமும் கொண்ட இந்த இளம் வீராங்கனை, வரும் காலத்தில் நீச்சல் உலகில் மேலும் பல உலக சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel