சவப்பெட்டிக்குள் உயிர்த்தெழுந்த 70 வயது மூதாட்டி: 2 நாட்களுக்கு பின் நிகழ்ந்த சோகம்
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயதை கடந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துவிட்டதாகக் கருதி சவப்பெட்டியில் வைக்கப்பட்ட பின்னர், மீண்டும் விழித்தெழுந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மூளை ரத்த உறைவு மற்றும் புற்றுநோயால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வந்த அந்த மூதாட்டிக்கு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காததால் குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து பராமரித்து வந்தனர். செப்டம்பர் 8-ஆம் தேதி அவரது உடலியக்கங்கள் முற்றிலும் நின்றதாகக் கருதிய குடும்பத்தினர், அவர் இறந்துவிட்டதாக முடிவு செய்தனர்.
தூரத்தில் வாழும் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்த வரும் வரை உடலைப் பாதுகாப்பதற்காக, குளிரூட்டும் வசதி கொண்ட சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது. அடுத்த நாள் மாலை, சவப்பெட்டியின் உள்ளிருந்து லேசான முனகல் சத்தம் கேட்பதை மூதாட்டியின் மருமகள் கவனித்தார். உடனடியாக சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது, மூதாட்டி உயிருடன் இருப்பது தெரியவந்தது. செப்டம்பர் 11 அன்று அவர் கண்கள் திறந்து பார்த்தபோதிலும், அவரால் உணவு உண்ணவோ அல்லது பேசவோ முடியாத மிக மோசமான நிலையிலேயே இருந்தார்.
அன்றைய இரவே அவர் மீண்டும் உயிரிழந்த நிலையில், செப்டம்பர் 13 அன்று அவரது இறுதிச்சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், இது "போலி இறப்பு" எனப்படும் அரிதான நிலை என்று சுட்டிக்காட்டுகின்றனர். இத்தகைய நிலையில் ஒருவரின் இதயத் துடிப்பு, மூச்சுக்காற்று மற்றும் உடலின் வளர்சிதை மாற்றம் ஆகியவை கண்டறிய முடியாத அளவுக்கு மிகக் குறைந்த அளவிற்கு குறைந்துவிடும். மேலும், சவப்பெட்டி உறைநிலை முறையில் வைக்கப்படாமல், சாதாரண குளிரூட்டும் முறையில் அமைக்கப்பட்டிருந்ததால், மூதாட்டியின் உடலியக்கம் சில மணி நேரங்கள் நீடிப்பதற்குச் சாத்தியமாக அமைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இணையதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் இல்லாமல் இறப்பை உறுதி செய்யும் வழக்கம் குறித்துப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். முறையான மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே ஒருவர் இறந்துவிட்டதாக முடிவு செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதள பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel