ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக செயல்படும் ரஷியா - பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை
ரஷிய ராணுவம் தனது நிலப்பரப்பை விரிவுபடுத்தும் நோக்கில், ஐரோப்பா நாடுகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டது.
ஐரோப்பா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில், ரஷியாவின் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ட்ரோன் மற்றும் இணையவழித் தாக்குதல்களிலிருந்து முக்கிய உள்கட்டமைப்புகளையும், பாதுகாப்புத் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பாதுகாக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய வாரங்களில் ரஷியா தனது நடவடிக்கைகளை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், ட்ரோன் மற்றும் இணையவழி அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சம்பவங்களையும் மேக்ரோன் குறிப்பிட்டார்.
மேலும், தங்கள் நாட்டிற்கு எதிரான ரஷியாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
முன்னதாக நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் மீது ரஷ்யா ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று உளவுத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேட்டோ நாடுகள் கூட்டணியின் கூட்டுப் பாதுகாப்பு உறுதிமொழிகளை சோதிக்கும் வகையில், இத்தகைய தாக்குதல் சூழல்நிலைகளை ரஷியா நடத்தும் என்றும் டஸ்க் கூறினார்.
வான்வெளி மீறல்கள், சந்தேகிக்கப்படும் நாசவேலைகள் மற்றும் ரஷியாவின் மீது சுமத்தப்பட்ட பிற நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருவதாலும், மேலும் ஐரோப்பிய நாடுகள் தங்களது ராணுவத் தயாரிப்புகளை விரிவுபடுத்தி வருவதாலும், ரஷியா போர் அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக நேட்டோ உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ஐரோப்பாவுடன் போரை ரஷியா விரும்பவில்லை என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பா எழுப்பிய எச்சரிக்கைகளையும் கவலைகளையும் ரஷியா நிராகரித்துள்ளது.
இதுகுறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியாவிற்கு எந்தவொரு ஆக்கிரமிப்பு நோக்கங்களும் இல்லை என்றும், மேலும் ஐரோப்பிய அண்டை நாடுகளுடன் உறவுகளை மீட்டெடுக்கவும் ஒத்துழைக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஐரோப்பிய தலைவர்கள் தங்களின் கொள்கைகளை நியாயப்படுத்த, ரஷியாவுடன் போருக்கு தயாராகி வருவதாகவும் புதின் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர், நாம் அமைதியாக வாழ்வோம்; இல்லையெனில், நாமும் பதிலடி கொடுக்க நிர்பந்திக்கப்படுவோம், என்று கூறினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel