டிரோன் திருட முயன்ற ஈரானிய படகுகள் அழிக்கப்பட்டன - அமெரிக்கா ராணுவம் அறிவிப்பு
ஈரான் கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா கப்பல் ஒன்றை திருட முயன்ற ஈரானின் இரண்டு சிறிய படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவற்றை அழித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. நீண்ட காலமாக நீடிக்கும் மோதலில் இது சமீபத்திய தாக்குதல் சம்பவமாகும்.
அமெரிக்க மத்திய கட்டளை பிரிவின் செய்தி தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், ஈரானியப் படகுகள் "சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா கடல்சார் கப்பலை கைப்பற்ற முயன்றன ஆனால் ராணுவம் "வலுவான பதிலடி கொடுத்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது," என்று தெரிவித்தார்.
ஈரானின் தெற்கு கடற்கரையில் உள்ள ஹார்முஸ்கான் மாகாணத்தில் இரண்டு மீன்பிடி படகுகள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், பல மீனவர்கள் காணாமல் போனதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன; மாகாண அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை பெற இரு தரப்பினரும் முயன்று வரும் நிலையில், 6 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த மோதலில் இது சமீபத்திய தாக்குதல் சம்பவமாகும். முக்கியமான எரிசக்தி கப்பல் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் பிடியை தளர்த்துவதில் அமெரிக்கா சமீபத்திய வாரங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், மக்கள் மத்தியில் ஆதரவற்ற இந்த மோதலால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலைகள் உயர்ந்துள்ளன; இது நவம்பரில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்கால தேர்தலுக்கு முன்னதாக அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடியரசு கட்சிக்கு அரசியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
"ஈரானுடனான ராணுவ மோதல் முடிவுக்கு வந்தவுடன் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக சரியும்; அந்த நேரம் வெகு தொலைவில் இல்லை," என்று டிரம்ப் சமூக வலைதள பதிவு ஒன்றில் கூறினார்.
பதற்றத்தைத் தணிக்கவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் வளைகுடா அரபு நாடான ஓமன் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து விவாதிக்க, அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்தது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel