விசேஷ நாட்களில் விதிவிலக்கு.. கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு கோவில்களில் செல்போன் அனுமதி
அமைச்சர் ரமேஷ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோவிலில் செல்போனுக்கு தடை விதித்திருப்பது புதிய நடைமுறை கிடையாது. 2022 டிசம்பர் மாதம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணா ஆகியோர் தீர்ப்பு கொடுத்தனர். திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த வழக்கு ஒன்று போட்டிருந்தனர்.
அந்த வழக்கில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் தடையை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தனர்.
அந்த தீர்ப்பின்படி பல கோவில்களில் செல்போன்களுக்கு தடை அமல்படுத்தப்பட்டு வந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர், பழனி, ராமேசுவரம் கோவில்களில் அப்போதே செல்போன் கவுண்டர் வைத்து 5 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.
அதன் பிறகு எல்லா கோவில்களிலும் செல்போனுக்கு தடை என்பது இருந்தது. அதற்கான பாதுகாப்பு பெட்டகம் இல்லாத 52 முதுநிலை கோவில்களிலும் அந்த தடையை கொண்டு வந்து அமல்படுத்தி இருக்கிறோம்.
பொதுமக்களை கஷ்டபடுத்த வேண்டும் என்பதற்காக இதை செய்யவில்லை.
பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கி விட கூடாது என்று மிக தெளிவாக எல்லா கோவில்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறோம். மொபைல் போனை பாதுகாப்பாக வைப்பது பெரிய பாரமாக மாறிவிடக்கூடாது.
இதையெல்லாம் பார்த்துவிட்டு அந்தந்த கோவில்கள் அதற்குதகுந்தாற் போல் முடிவுகளை செய்யுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டுப்பாடு இல்லை. அவர்களிடம் மொபைல்போன்களை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
கோவில்களில் செல்போன் வாங்கி வைப்பற்காக மகளிர் சுய உதவிக்குழுவினரை வேலைக்கு எடுத்து அவர்களை பயன்படுத்துகிறோம். அவர்களுக்கு சம்பளம் அதில் இருந்து கொடுக்க போகிறோம்.
செல்போனுக்கு டோக்கன் பிரிண்ட் செய்து கொடுக்கிறோம். அதற்காக பேப்பர் ரோல் வாங்குகிறோம். இந்த மாதிரி விஷயங்களுக்காகத்தான் செல்போனுக்கு கட்டணமாக பெறப்படும் ரூ.5 பயன்பட போகிறது.
அன்னதானத்துக்கு பயன்படுத்துவோம்
அதில் வருமானம் மிச்சம் இருந்தால் அந்த கோவிலுக்கு வழங்கக்கூடிய ஏழை எளிய பக்தர்கள் அன்னதானத்தில் சாப்பிட அந்த பணத்தை பயன்படுத்த போகிறோம்.
இதை தனி நபர்கள் எடுத்து செல்வது போலவோ, கோவிலில் கொள்ளையடிப்பது போலவோ பலர் பேசிக்கொள்கிறார்கள். அவர்களின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது.
அரசாங்கம் ஒரு விஷயத்தை செய்யும்போது அதை எதிர்ப்பவர்கள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. இதை அமல்படுத்தும்போது உண்மையிலேயே பொதுமக்களுக்கு சிக்கல்கள் இருக்கிறது. பிரச்சினைகள் இருக்கிறது. மனஅழுத்தம் இருக்கிறது என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை முதலில் அரசாங்கம்தான் செய்யும்.
அதில் நாங்கள் தயக்கம் காட்ட மாட்டோம். பொது மக்களுக்கு ஒரு கஷ்டம் இருந்தால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை நாங்களே செய்வோம். பொதுமக்கள் இதை செய்தே ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடிய அரசாங்கம் இது கிடையாது.
இது மக்களுக்கான அரசாங்கம் தான். இதை தவறாக சிலர் வெளியே கொண்டு செல்கிறார்கள். அவர்களின் நோக்கம் இந்து சமய அறநிலையத் துறையே இருக்கக் கூடாது என்று யோசிக்கக் கூடிய கும்பல் அவர்கள்.
கோவிலில் நடைமுறையாக என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நடைமுறையில் பிரச்சினைகள் இருந்தால் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கிறது.
இதை கோவில்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். கோவில்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு 5 ரூபாய் வாங்கலாமா, வேண்டாமா? என்பதை வருங்காலத்தில் கோவில்களே முடிவு எடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறோம்.
அதில் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. எதுவுமே இல்லாத விஷயத்தை பெரிதுப்படுத்தி கோவிலை வைத்து அரசியல் செய்கிறார்கள். கோவில் அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது.
அங்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. அமைதியாக தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இதை நடைமுறைப்படுத்துகிறோம்.
இந்த 52 கோவில்களும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள். அந்த கோவில்களில் உள்ளே செல்லும்போது கல்வெட்டுகள், தமிழ் எழுத்துக்கள், தமிழ் பக்தி இலக்கியங்களை நிறைய இடங்களில் வைத்திருக்கிறோம்.
அதையெல்லாம் அவர்கள் பார்க்க வேண்டும். படிக்க வேண்டும். சிற்பக் கலையை ரசிக்க வேண்டும். கட்டுமான கலையை ரசிக்க வேண்டும் ஆகியவை கோவிலில் செல்போன் பயன்படுத்துவதால் தடைபட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளோம்.
பொதுமக்களிடம் கருத்து பா.ஜ.க. ஆளக்கூடிய வடமாநிலங்களிலும் கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. எனவே இதை வைத்து அரசியல் செய்யும் வேலையை செய்ய வேண்டாம்.
இது சம்பந்தமாக பக்தர்களிடம் கருத்து கேட்டு வருகிறோம். அவர்களின் கருத்துக்களை பொறுத்து நிச்சயமாக மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
கோவில்களில் கூட்டம் அதிகமாக வரக்கூடிய விசேஷ நாட்களில் மொபைல்போன் கவுண்டர்களில் செல்போன் வாங்குவதை வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel