எங்களை தூக்கிலிட்டாலும் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவோம் - கர்நாடக காங்கிரஸ் தலைவர்
காங்கிரஸ் கட்சி எப்போதுமே வந்தே மாதரத்தின் இரண்டு சரணங்களை மட்டுமே பாடி வந்துள்ளது என்றும் இனிமேலும் தொடர்ந்து அவ்வாறே பாடும் என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கே. ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுதந்திர தினத்தன்று காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டபோது, அந்த பாடலை பாடியவர் இரண்டு சரணங்களுக்கு மேல் பாடியபோது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கையை நீட்டி சைகை காட்டினார்.
இதையடுத்து வந்தே மாதரம் தேசிய பாடலை, பாடகர்களை முழுமையாக பாட அனுமதிக்காமல் சோனியா காந்தி தடுத்ததாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் ஹரி பிரசாத் கூறுகையில், “அவர்கள் ஏன் ஆசாத் ஹிந்த் ஜிந்தாபாத் அல்லது இன்குலாப் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்களை எழுப்புவதில்லை என்பதை விளக்கட்டும்.
வந்தே மாதரத்தின் முழு பதிப்பையும் பாடுமாறு மக்களை கட்டாயப்படுத்துவதன் மூலம், பாரதிய ஜனதா கட்சி ’ஜன கன மன’ என்ற தேசிய கீதத்தை அவமதிக்கிறது.
வந்தே மாதரத்தை தேசிய கீதமாக மாற்றுவதற்கு சங் பரிவார் திட்டமிட்டு வருகிறது.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்களது அலுவலகங்களில் இந்த பாடலை எத்தனை முறை பாடுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.
அவர்கள் எங்களை தூக்கில் இடட்டும், நாங்கள் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவோம். அந்த பாடலின் இரண்டு சரணங்களுக்கு மேல் நாங்கள் ஒருபோதும் பாடமாட்டோம்.
ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் நாங்கள் இரண்டு சரணங்களை மட்டுமே பாடியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel