மரண தண்டனையை விஷ ஊசியால் நிறைவேற்ற உத்தரவிடக்கோரி மனு: 'No' சொன்ன உச்சநீதிமன்றம்
இந்தியாவில் கொடூர குற்றத்திற்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பல விதமாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மரண தண்டனை தூக்கு மூலம் நிறைவேற்றப்படுகிறது. இதனால் இந்தியாவில் மரண தண்டனை தூக்குத் தண்டனையாகவே அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தூக்கு மூலம் தண்டனை நிறைவேற்றப்படுவதற்குப் பதிலாக விஷ ஊசி, துப்பாக்கியால் சுட்டு, மின்சாரம் பாய்ச்சு அல்லது வாயு அறை ஆகிய வழிகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட பரிந்துரை செய்யலாம்.
தூக்கு மூலம் தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் அதிகப்படியான வலி குற்றவாளிக்கு ஏற்படும். இது மனிதாபிமானமற்றது. கொடூரமானது. தூக்கு போட்ட பிறகு, சுமார் 40 நிமிடம் கழித்து அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்படும். இது துப்பாக்கியால் சுட்டு அல்லது விஷ ஊசி செலுத்தி நிறைவேற்றப்பட்டால் 5 நிமிடங்கள் போதுமானது.
மரண தண்டனை விதிக்கப்படும்போது அது மிகக் குறைந்த அளவிலான வேதனையை ஏற்படுத்தும் வகையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா தாக்கல் செய்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
தூக்கிலிடுவதன் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதன் அரசியலமைப்பு சட்ட செல்லுபடியை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போதைக்கு நாட்டில் தூக்கிலிடப்படும் முறையே தொடரும் எனத் தெரிவித்தனர்.
அத்துடன் தங்கள் தீர்ப்பே இறுதியானது அல்ல என்றும், மத்திய அரசு விரும்பினால் மாற்று வழிமுறைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.