ரூ.1 கோடி கடத்தல் வழக்கு: 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது!

டெல்லியில் 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற கடத்தல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக காவல்துறையிடம் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த அமித் யாதவ் (57) என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டேராடூனில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

டெல்லி படேல் நகரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனான ரிஷி சேத்தி என்பவர், 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று எய்ம்ஸ் இயக்குனர் குடியிருப்பு அருகே தனது காரில் அமர்ந்திருந்தபோது 3 முதல் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் அவரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து, அவரது குடும்பத்தினரிடம் 1 கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்டனர்.

காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, மீரட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் 10 லட்சம் ரூபாய் பணத்தை வைப்பதாகக் கடத்தல்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 16, 1995 அன்று அப்பணத்தைப் பெற வந்த அமித் யாதவை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், காசியாபாத்தில் உள்ள வீட்டின் சேமிப்பு அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ரிஷி சேத்தி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கில் 1999-ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் அமித் யாதவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, 2000-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவருக்கு ஒரு மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் ஜாமீன் காலம் முடிந்ததும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பியோடினார்.

தலைமறைவான அமித் யாதவ், காசியாபாத் வாடகை வீட்டைக்காலி செய்துவிட்டு, பாக்பத்தில் இருந்த தனது பூர்வீகச் சொத்துகளை விற்றார். டெல்லி காவல்துறையின் பிடியிலிருந்து தப்ப ரிஷிகேஷிற்குச் சென்று அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். பின்னர் 2001-இல் டேராடூனுக்குச் சென்று தனது அடையாளத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டு, புதிய பெயரில் கட்டிட ஒப்பந்ததாரராக உருவெடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

சமீபத்திய புகைப்படங்கள் எதுவுமில்லாத நிலையில், 1999-ஆம் ஆண்டு தண்டனையின் போது பதிவு செய்யப்பட்ட பழைய பயோமெட்ரிக் மற்றும் கைரேகை பதிவுகளை குற்றப்பிரிவு போலீசார் மீட்டெடுத்தனர். அதன் மூலம் தீவிர விசாரணை நடத்தி டேராடூனில் அவர் இருக்கும் இடத்தை உறுதிசெய்து, கடந்த 13ம் தேதி அன்று அதிரடி சோதனை நடத்தி அவரைப் பிடித்தனர். தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel