குடிநீர் குழாய்களில் பாக்டீரியா.. நாட்டின் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளே இல்லை - சிஏஜி அறிக்கை

நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளில் கடும் குறைபாடு இருப்பதாக சிஏஜி அறிக்கை வெளியாகியுள்ளது.

பல்வேறு ரெயில்வே மண்டலங்களில் உள்ள 512 புறநகர் அல்லாத வெளியூர் ரெயில்கள் இயக்கப்படும் ரெயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், பாலக்காடு, ஐதராபாத், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரெயில் நிலையம் ஆகியவை இதில் அடங்கும்.

அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில் 8 மண்டலங்களில் உள்ள 49 ரெயில் நிலையங்களின் பிளாட்பார குடிநீர் குழாய்களில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் Total Coliform என்ற பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது.

2023-24 நிதியாண்டில் 9 மண்டலங்களில் உள்ள 56 ரெயில் நிலையங்களில் வாட்டர் கூலர்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் E. coli பாக்டீரியா கண்டறியப்பட்டது.

E. coli பாக்டீரியா பொதுவாக மனித அல்லது விலங்கு கழிவு மாசுபாட்டால் நீரினுள் ஊடுருவக்கூடிய ஒன்றாகும்.

ஆய்வு செய்யப்பட்ட 512 ரெயில் நிலையங்களில் 458 நிலையங்களில், அதாவது சுமார் 90% நிலையங்களில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய அத்தியாவசிய வசதிகள் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மும்பை சென்ட்ரல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், ஹவுரா - சீல்டா மற்றும் டெல்லி போன்ற நாட்டின் மிகப்பெரிய ரெயில் நிலையங்களிலும் கூட இருக்கை வசதி, தூய்மை, குப்பைத் தொட்டிகள் மற்றும் மின்னணு தகவல் பலகைகள் அமைப்பதில் பெருமளவு குறைபாடுகள் பதிவாகியுள்ளன.

ரெயில்வே வாரியம் ஏப்ரல் 2018இல் NSG-1 முதல் NSG-6 வகையை சேர்ந்த அனைத்து ரெயில் நிலையங்களிலும் குறைந்தபட்ச வசதிகளை உறுதி செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே, ரெயில் நிலையங்களில் குடிநீர் விநியோக அமைப்புகளைத் தொடர்ந்து ஆய்வு செய்யவும், குடிநீரின் தரத்தைச் சோதிக்க நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு பின்பற்றவும் ரெயில்வே நிர்வாகத்திற்கு சிஏஜி பரிந்துரை செய்துள்ளது.

NSG-1 முதல் NSG-3 வரை அதிக வருமானம் ஈட்டும் மிக முக்கியப் பெருநகர நிலையங்கள் எனவும், NSG-4 முதல் NSG-6 வரை நடுத்தர மற்றும் சிறிய அளவிலான ரெயில் நிலையங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel