தமிழ்நாட்டுக்கு முழு தண்ணீரும் வழங்கப்படும்.. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த கர்நாடகா

தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடாததை எதிர்த்து தமிழக அரசு, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

காவிரி ஒழுங்குமுறை குழு மற்றும் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்த அளவை விடக் கர்நாடகா மிகக் குறைந்த அளவே நீரைத் திறந்துவிட்டதாக மனுக்களில் தெரிவிகிக்கப்பட்டிருந்தன.

இந்த சூழலில் இன்றைய விசாரணையில் கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், தமிழகத்திற்கு நாள்தோறும் 12,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றும் என உறுதியளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "கடுமையான சூழல் நிலவியபோதிலும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி 12,000 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிடுவதை உறுதிசெய்ய முயன்றுள்ளோம்.

ஆரம்பத்தில் சில நாட்களில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு 6,000 கனஅடியாக குறைந்திருந்தாலும், தட்டுப்பாட்டை சரிசெய்து வரும் நாட்களில் முழு அளவிலான தண்ணீரும் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீர் திறப்பு நிலவரம் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர் வரத்து 6500 கன அடியிலிருந்து 8000 கன அடியாக உயர்ந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4385 கன அடியில் இருந்து 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.31 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 43.27 மில்லியன் கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,179 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel