அதிகாலையிலே திரண்ட 50,000 பக்தர்கள்.. பீகார் சிவன் கோவிலில் கூட்டநெரிசல் - 7 பேர் பலி - பலர் படுகாயம்
பீகார் மாநிலம் லஹிசாராய் மாவட்டத்தில் அசோக்தாம் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது.
புனித ஸ்ராவன் மாதத்தில் மூன்றாம் திங்களான இன்று (ஆகஸ்ட் 17) காலையிலேயே சிவனை தரிசித்து ஜல அபிஷேகம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அசோக்தாம் கோவிலில் திரண்டனர்.
காலை 6.30-6.45 மணியளவில் சுமார் 50,000 பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்த நிலையில் அருகில் இருந்த மின்சார கம்பம் சாய்ந்து மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.
கரண்ட் ஷாக் அடித்துவிடும் என்ற அச்சத்தால் ஏற்பட்ட பீதியில் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சிதறி ஓடத் தொடங்கினர்.
இதன்போது பலர் கூட்ட நெரிசலுக்கு இடையில் சிக்கி கீழே விழுந்தனர். அவர்களை மற்றோர் ஏறி மிதித்துச் சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு லஹிசாராய் சர்தார் மருத்துவமனையிலும் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
கோவில் வளாகத்தை கட்டுப்பாட்டில் எடுத்த காவல்துறை பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் நடந்த சூழ்நிலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலதிக தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.