வெற்றி ஸ்டிக்கரில் வெற்று விளம்பரம்.. பட்டாசு தொழிலை மொத்தமாக முடக்கும் தவெக அரசு - தங்கம் தென்னரசு

பட்டாசுத் தொழிலை முடக்கும் வகையில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்டித்து விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிவகாசியில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.

இதில் பேசிய அவர்,

"ஒரு அரசு தனது மக்களைக் காப்பதில் எந்த அளவிற்கு முன்முயற்சியுடன் செயல்பட வேண்டுமோ, அதேபோல் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கும் தொழிலையும் பாதுகாக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்த வட்டாரத்தில் 6,000க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ள நிலையில், இதன்மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.

ஆனால், த.வெ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் பட்டாசுத் தொழிலை நசுக்கும் வகையிலான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது.

கடந்த மூன்று மாதங்களில் இந்த தொழிலை நசுக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் விபத்துகளைக் காரணம் காட்டி ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலையும் ஒரேடியாக முடக்கி நசுக்குவது எந்த வகையில் நியாயமாகும்.

ஏனெனில், ஒரு தொழிற்சாலை மூடப்பட்டால் அது அந்த நிர்வாகத்தோடு முடிந்துவிடாது. அந்தத் தொழிற்சாலையை நம்பியுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலை என்னவாகும் என்பதை அதிகாரிகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

முறையாக விதிகளைப் பின்பற்றாமல், அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்கப்போவதில்லை.

யாராவது சட்டவிரோதமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தால், அதை முழுமையாகத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை நாம் வரவேற்கிறோம்.

ஆனால், முறையாக உரிமம் பெற்றுள்ள தொழிற்சாலைகளிலும் திடீர் ஆய்வுகள் என்ற பெயரில் சென்று தொழிலை மொத்தமாக முடக்குவது எந்த வகையில் நியாயம் என்பதுதான் எங்களுடைய கேள்வி.

சாதாரண சிறு வணிகர்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படும் வகையில் ஆய்வுகள் என்ற பெயரில் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை.

இதை உடனடியாக நிறுத்த வேண்டும். தவெக ஆட்சி வந்த உடனே சிவகாசி மாறிவிடும் என்று கூறினீர்கள். இந்த மூன்று மாதங்களில் என்ன மாற்றம் வந்துள்ளது.

பட்டாசுத் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்குவோம் என்று கூறினீர்களே, வழங்கினீர்களா?. சிவகாசியில் இருக்கிற தொழில்துறை அமைச்சர், தேர்தல் நேரங்களில் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு வந்து ரீல்ஸ் எடுத்துப் பதிவிட்டார்.

அதில் 10 கி.மீ. சுற்றளவுக்கு ஒரு தீயணைப்பு நிலையமும், ஆம்புலன்ஸ் வசதியும் அமைக்கப்படும் என்று கூறினார். ஆனால், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதுகுறித்து எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா?

மொத்தத்தில், எதை கேட்டாலும் எல்லாமே இல்லை, இல்லை என்று சொல்வதுதான் உங்களுடைய மாற்றம்.

ஆனால், இருக்கிறது, இருக்கிறது என்று மக்களுக்கு தேவையான அத்தனை திட்டங்களுக்கும் அள்ளித் தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி ரூ.1 லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்ததாக விளம்பரம் செய்கிறீர்கள். ஆனால், உங்கள் காலடியில் இருக்கக்கூடிய பட்டாசுத் தொழிலை ஏன் நசுங்க செய்கிறீர்கள்?

இந்த ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் வழங்க வேண்டிய நிதியைக் குறைத்திருக்கிறீர்கள். பட்டாசுத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, கல்வித்துறை நிதி என பல்வேறு துறைகளிலும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நல்ல திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து, அதற்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

எல்லாவற்றிலும் வெற்றி, வெற்றி என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்கிறீர்கள். ஆனால் அந்த வெற்றி உண்மையிலேயே மக்களின் வெற்றியாக இருக்கிறதா என்றால் இல்லை.

அவை வெற்றித் திட்டங்களாக இல்லை; வெற்றுத் திட்டங்களாகத்தான் இருக்கின்றன. த.வெ.க. அரசு இந்த மூன்று மாத காலத்தில் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது. " எனத் தெரிவித்தார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel