2030இல் இந்தியாவில் சங்கமிக்கும் உலக வீரர்கள்.. காமன்வெல்த் கொடியை பெற்றுக்கொண்ட நீரஜ் சோப்ரா - பி.டி. உஷா
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக நடைபெற்று வந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன.
இசை நிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் கொடி இறக்கப்பட்டு, போட்டிகள் முடிவுக்கு வந்தன.
இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார்.
"2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 100வது ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரை கொண்டாட, உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களை இந்தியாவின் அகமதாபாத் நகருக்கு அன்போடு அழைக்கிறேன்" என்று அவர் பேசினார்.
நிறைவு விழாவில் ஸ்காட்டிஷ் மற்றும் இந்திய பாரம்பரியக் கலைகளை ஒருங்கிணைத்து இந்தோ-ஸ்காட்டிஷ் கலாச்சார இசை மற்றும் நடன நிகழ்வு அரங்கேறியது.
"உலகம் ஒரே குடும்பம்" என்ற இந்தியத் தத்துவத்தை மையமாகக் கொண்டு இந்தியக் கலை நிகழ்ச்சிகள் அமைந்தன.
வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாடும் வகையில், நடிகை மனுஷி சில்லார் தலைமையில் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் மற்றும் ஷங்கர் மகாதேவனின் இசையுடன் பிரம்மாண்ட நடன நிகழ்வு நடைபெற்றது.
பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளுடன் அனைத்து நாடுகளின் கொடியேந்திகள் அணிவகுத்து வந்தனர்.
இந்திய அணி சார்பில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தேசியக் கொடியை ஏந்தி வந்தார்.
விழா முடிவில், 2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் அகமதாபாத் நகரத்திற்காக, இந்தியாவின் சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவி பி.டி. உஷா மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் காமன்வெல்த் கொடியைப் பெற்றுக்கொண்டனர்.
2026 காமன்வெல்த் தொடரில் இந்தியாவின் 39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் அடங்கும்.
13 தங்கம், ஒன்பது வெள்ளி உட்பட 39 பதக்கங்களுடன் ஸ்காட்லாந்து 5வது இடத்தில் உள்ளது.
68 தங்கம், 41 வெள்ளி மற்றும் 54 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 163 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதலித்தில் உள்ளது.
26 தங்கம், 43 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 105 பதக்கங்களைப் பெற்று இங்கிலாந்து இரண்டாம் இடம் பிடித்தது.
18 தங்கம், 20 வெள்ளி மற்றும் 21 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 59 பதக்கங்களை அடைந்து மூன்றாம் கனடா இடத்தில் உள்ளது.