போதைப் பொருள் பயன்படுத்துவதில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் - விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு!

வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான போதைப் பொருள் இல்லாத இளைஞர் விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருந்தது.

அதன்படி போதைப் பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று காலை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

போதைப் பொருட்கள் புழக்கம் இல்லாத இந்தியா என்ற இலக்கை முன்நிறுத்தி நாடு முழுவதும் விழிப்பு ணர்வு ஏற்படுத்த இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. போதையின் பிடியில் சிக்கிய இளைஞர்களை மீட்பதுடன், அதில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், தன்னார்வலர்கள் போன்ற 125-க்கும் மேற்பட்ட அமைப்புகளை இணைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள் மூலமும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் ஒரே நேரத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இதில் 1 கோடிக்கு அதிகமான இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த உறுதிமொழி இயக்கம் 100 வாரங்களுக்கு தொடரும் மக்கள் இயக்கமாகும்.

இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள், நடைபயணங்கள் நடத்தப்படும்.

போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள் இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

இன்று நாம் காணும் இந்த இயக்கம் தனிநபர் மற்றும் சமூகத்திற்கானது. எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டிற்கானது. அடுத்த 100 ஞாயிற்றுக்கிழமைகளும் போதை பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய வலுவான நடவடிக்கைகளாக அமையும்.

வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய இளைஞர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும். நாட்டு மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கத்துடன் 125-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகள் எங்களுடன் இணைந்து உள்ளன.

போதைப்பொருள் இல்லா இளைஞர்களுக்கான இயக்கம் இன்று நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது. கூட்டு நடவடிக்கையில் அளப்பறிய ஆற்றல் உள்ளது. இந்த இயக்கம் ஒவ்வொரு இளைஞர்களின் மனதை சென்றடைய உள்ளது.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போதைப் பொருட்களில் இருந்து விலகி இருப்பதற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இன்று எடுக்கப்பட்ட இந்த உறுதி மொழி அடுத்த 100 வாரங்களுக்கு தொடர்ந்து உறுதியுடன் முன்னெடுத்து செல்லப்படும்.

போதைப் பொருள் பயன்பாடு கவனத்தை சிதறடித்து, உங்களை உங்கள் கனவு களில் இருந்து விலக்குகிறது. ஒரு இளைஞன் போதை பொருளுக்கு அடிமையா னால் அவனது லட்சியங்கள் பாதிக்கப்படுகின்றன. குடும்பங்கள் சிதைகிறது.

போதைப் பொருட்கள் விநியோகிப்பதன் மூலம் இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது எதிரி நாடுகளின் பயங்கரவாத திட்டத்தின் ஒரு பகுதியாகும்.”

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel