நாளை ஆடிப்பவுர்ணமி: விரதம் இருந்து அம்மன், பெருமாளை வணங்கினால் செல்வ வளம் சேரும்
ஆடிப் பவுர்ணமி எனப்படும் குரு பூர்ணிமா அம்மன் வழிபாட்டிற்கும், குருவை வணங்குவதற்கும் மிகச்சிறப்பு வாய்ந்த ஆன்மீக நாளாகும். இந்நாளில் கல்வி, ஞானம் மற்றும் குடும்ப வளம் பெருக சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. குரு பூர்ணிமா ஞானக் கடவுளாம் ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் முதன்மைக் குருவான வியாசர் அவதரித்த நாளாகவும் கருதப்படுகிறது.
ஹயக்ரீவரையும் குருவையும் வணங்கினால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஆடிப் பவுர்ணமியில் அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சாற்றி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால் குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடி கொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.
பவுர்ணமி அன்று பக்தர்கள் உணவு உண்ணாமல் விரதம் மேற்கொள்கின்றனர். மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் வழிபாடு மேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்யப்படுகிறது.
ஆடி மாதத்தில் பவுர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பவுர்ணமி அன்று பெருமாளை விளக்கேற்றி வழிபட பதவி கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும். அதுவும் ஆடி பவுர்ணமி பெருமாளுக்கு உகந்த புதன்கிழமையில் வருவதால் அவரை வணங்கினால் தன்னம்பிக்கையும், அறிவாற்றலும் பெருகும்.
ஆடிப் பவுர்ணமியில் பெண்கள், அம்மன் கோவில்களில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம். அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உண வேதும் அருந்தாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மேலும், அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பூக்களால் அர்ச்சனை செய்து சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது.
ஆடிப் பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லது. பின்பு நைவேத்தியப் பிரசாதத்தை கோவிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். இவ்வாறு வழிபடுவதால் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும். வியாபாரங்களில் எதிர்ப்புகள் நீங்கி லாபங்கள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மாலை நேரத்தில் முழு நிலவு நிறைவு பெறும் நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் சுபிட்சம் ஏற்படும். மாலையில் அம்பாளுக்கு பூஜை செய்து பால் நைவேத்தியமாக படைத்து, அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பானது. சிவ வழிபாடு செய்வது பல மடங்கு புண்ணியத்தை தரும். மாலையில் சந்திர வழிபாடு செய்வதும் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி, நிம்மதி அடைய செய்யும். பகை, நோய்கள் நீங்கும். கடன் தொல்லை விலகும். வாழ்க்கையில் மாற்றம், ஏற்றம் ஏற்படும்.
குடும்ப ஒற்றுமை வேண்டுபவர்கள் ஆடி பவுர்ணமியில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
ஆடி பவுர்ணமி அன்று முன்னோர்களை நினைத்து ஆற்றங்கரை, குளக்கரைக்களில் வழிபடுவது சிறப்பு. புனித நதிகளுக்கு சென்று நீராடி, விளக்கு விடுவது, கரையில் விளக்கேற்றி வழிபடுவது குடும்பத்தில் சுபிட்சத்தையும், மன அமைதியையும் தரும். இன்று ஒரு விளக்கு சிவன் கோவிலுக்கு சென்று ஏற்றி வழிபட்டால் லட்சம் தீபம் ஏற்றி வழிபட்ட பலன் கிடைக்கும்.
ஆடிப் பவுர்ணமி நாளில் சிவன் கோவிலுக்கு சென்று திரட்டு பால் அபிஷேகம் செய்து, கருப்பு பட்டை சாற்றி, ஊமத்தம் பூ மாலை சாற்றி, மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் கடன், பகை தீரும். வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்கிறவர்கள் இந்த நாளை தவற விடக்கூடாது. திரட்டுப்பால் (திரட்டுப் பாயசம் அல்லது திரட்டிப்பால்) என்பது பசும்பாலுடன் வெல்லம் அல்லது சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து சுண்டக் காய்ச்சி கெட்டியாகத் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய இனிப்புப் பிரசாதமாகும். கோடை காலத்தின் வெப்பத்தைத் தணித்து, விக்கிரகங்களின் தெய்வீக ஆற்றலைத் தூண்டுவதற்காக இந்த இனிப்பு கலந்த அபிஷேகம் செய்யப்படுகிறது.
பாலபிஷேகம் மற்றும் சர்க்கரை அபிஷேகத்தின் கூட்டுப் பலன் திரட்டுப்பால் அபிஷேகத்தால் கிடைக்கிறது. சர்க்கரை மற்றும் வெல்லம் கலந்த இந்தத் திரவியத்தால் இறைவனை அபிஷேகம் செய்யும் போது, நம் வாழ்வில் உள்ள கவலைகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகள் விலகும். பால் சார்ந்த அபிஷேகங்கள் வம்ச விருத்தி, நீண்ட ஆயுள் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும். வாழ்வில் வறுமை நீங்கி, செல்வம் மற்றும் தன தானியங்கள் பெருக இந்த அபிஷேகம் வழிவகுக்கும். மன சஞ்சலங்கள் நீங்கி, தெளிவான சிந்தனையும், ஆன்ம தூய்மையும் உண்டாகும்.