வந்தே மாதர பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்!

வந்தே மாதரப் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகுக்கும், தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026 இன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்தார்.

இந்த மசோதா தாக்கலைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை வரும் திங்கள்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மக்களவை, எதிர்க்கட்சிகளின் அமளியால் 12.15 மணிக்கே ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மாநிலங்களவையில் மட்டும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மசோதா என்னக்கூறுகிறது?

1971-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் (பிரிவு 3) திருத்தம் கொண்டுவரப்பட்டு, தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றுக்கு இணையாக தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

வந்தே மாதரம் பாடல் பாடுவதை யாராவது வேண்டுமென்றே தடுத்தாலோ, அல்லது பாடல் இசைக்கப்படும் கூட்டத்தில் இடையூறு விளைவித்தாலோ அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க அரசாங்கம் முயன்று வருகிறது. தேசிய கீதம் இசைக்கப்படும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது அல்லது இசைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் முன்னதாக வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு முழுமையான சட்டமாக அமலுக்கு வரும்.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel