ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டுகள் சிறை: வினாத்தாள் கசிவுகளுக்கு தண்டனையை கடுமையாக்கும் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
வினாத்தாள் கசிவுகளுக்கு கடுமையான தண்டனைகளை உறுதிசெய்யும் வரைவு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் பிரதானின் பதவி விலகல், தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றல், கல்வித்துறையில் சீர்திருத்தங்கள், நீட்-யுஜி தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட திட்டமிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை, ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.
வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை மிக விரைவாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குவதை உறுதி செய்ய பிரத்யேக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவும் மசோதாவில் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மசோதா திங்கள்கிழமை (ஜூலை.27) நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.