பென் கர்ரன், பிராட் இவான்ஸ் அதிரடி: வங்கதேசம் வெற்றிபெற 248 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே

வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 247 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.

அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி விக்கெட்டுகளை விரைவில் இழந்து திணறியது. அந்த அணி 66 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

5வது விக்கெட்டுக்கு பென் கர்ரன், சிக்கந்தர் ராசா ஜோடி 68 ரன்கள் சேர்த்தது. சிக்கந்தர் ராசா 33 ரன்னில் அவுட்டானார்.

பொறுப்புடன் ஆடிய பென் கர்ரன் சதமடித்து அசத்தினார்.

7வது விக்கெட்டுக்கு பென் கர்ரன், பிராட் இவான்ஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக, பிராட் இவான்ஸ் 38 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 58 ரன்கள் குவித்தார்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. பென் கர்ரன் 111 ரன்னும், பிராட் இவான்ஸ் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்குகிறது.

பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel