போலி டிக்கெட்டுகளுக்கு செக்: 'Rail One' செயலி மூலம் எடுக்கப்படும் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு ரெயில்வே அதிரடி கட்டுப்பாடு!
இந்திய ரயில்வேயின் புதிய Rail One செயலி மூலம் எடுக்கப்படும் முன்பதிவு இல்லாத (Unreserved) டிக்கெட்டுகள் குறித்து ரயில்வே நிர்வாகம் மிக முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் டிக்கெட்டுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், போலி டிக்கெட் மோசடிகளைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Rail One செயலி மூலம் 'அன்-ரிசர்வ்டு' டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள், பயணத்தின் போது தங்களின் மொபைலில் உள்ள செயலியை நேரடியாகத் திறந்து காண்பித்தால் மட்டுமே அது செல்லுபடியாகும் என இந்திய ரெயில்வே மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
*டிக்கெட்டுகளின் ஸ்கிரீன்ஷாட்டுகள்
*PDF வடிவங்கள்
*வாட்ஸ்அப் பார்வேர்டுகள்
ஆகியவை எக்காரணம் கொண்டும் பயணச் சீட்டாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
டிடிஇ பரிசோதனையின் போது போனில் செயலியை நேரடியாகக் காட்டாமல், ஸ்கிரீன்ஷாட்டோ அல்லது வாட்ஸ்அப் பார்வேர்டோ காண்பித்தால், அவர்கள் டிக்கெட் இல்லாத பயணிகளாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு ரெயில்வே விதிமுறைகளின்படி கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
ஒரே டிக்கெட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலருக்குப் பகிர்ந்து, ஒரே கட்டணத்தில் பல நபர்கள் பயணம் செய்யும் முறைகேடுகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளதால் இந்த கடுமையான விதியை ரெயில்வே அமல்படுத்தியுள்ளது.
இச்செயலி மூலம் எடுக்கப்படும் சாதாரண லோக்கல் டிக்கெட்டுகள் எடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். எனவே, முன்கூட்டியே டிக்கெட் எடுத்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ரெயில் நிலையங்களுக்குள் சில நேரங்களில் சிக்னல் கிடைக்காமல் போகலாம் என்பதால், பயணிகள் தங்களின் 'Rail One' செயலியில் உள்ள 'Show Ticket' வசதியை முன்கூட்டியே சோதித்துக் கொள்வது அவசியமாகும்.